ஓட்டமாவடியில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

01 15 1
01 15 1

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நாட்டில் சமாதானம், சகவாழ்வினையும் குழப்பும் வகையில் ஏனைய சமூகங்களிலும் இதுபோன்ற சூத்திரதாரிகள் இருந்து கொண்டு இருக்கின்றார்களே தவிர இது ஒட்டுமொத்த சமூகத்தினையும் பிரதிபலிப்பது அல்ல என 23ஆவது இராணுவ படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த தெரிவித்தார்.

நாட்டைக் காக்க யுத்தம் செய்து உயிர்த் தியாகம் செய்த இராணுவ, காவல்துறை, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்து அவர்களின் குடும்பத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

இலங்கையில் முப்பது வருட கால சூழ்நிலையில் இப்போது எங்களுக்கு ஒரு அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுத் தந்திருக்கின்றது. அனைத்து சமூகமும் ஒற்றுமையுடன் வாழ வேண்டிய படிப்பினையை விட்டுச் சென்றுள்ளது. கடந்த பத்து வருட காலத்தில் நாட்டில் நிலையான அபிவிருத்தி, சமாதானம் ஏற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற அந்த துயரமான நிகழ்வு இந்த நாட்டுக்காக முன்னெடுத்து வந்த சம்பவங்களில் சில சிதைவுகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்தி விட்டதை மனவேதனையுடன் குறிப்பிடுகின்றேன்.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நாட்டில் சமாதானம், சகவாழ்வினையும் குழப்பும் வகையில் முயற்சி செய்த சூத்திரதாரிகள் ஏனைய சமூகங்களிலும் இதுபோன்ற சூத்திரதாரிகள் இருந்து கொண்டு இருக்கின்றார்களே தவிர இது ஒட்டுமொத்த சமூகத்தினையும் பிரதிபலிப்பது அல்ல.

ஆனால் எதிர்காலத்தில் எங்களுடைய பிரஜைகளை இன, மத, மொழி என்ற பாகுபாட்டுக்கு அப்பால் இலங்கையர் என்ற ஒற்றுமையோடு கட்டியெழுப்ப கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறான நிகழ்வுகள் இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்திற்கும், நீடித்து நிலைத்த அபிவிருத்திக்கும் நிச்சயமாக உதவும். இதுபோன்ற நிகழ்வின் மூலம் சமூகங்களிடையே ஒற்றுமையை பேணுவதோடு இந்த நாட்டின் ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும், இதனை ஏற்பாடு செய்த பிரதேச சபையினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தாய் நாட்டுக்கான உயிரை தியாகம் செய்தவர்களுக்கு கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட குடும்பத்தாருக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கின்றேன். எமது நாடு பிளவுபடுவதில் இருந்து பாதுகாப்பதற்காக தனது உயிர்களை தியாகம் செய்தவர்கள் அவர்களை இந்த நேரத்தில் நான் அவர்களுக்கு கௌரவமான நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நாட்டில் சமாதானத்திற்கும் நீடித்த அபிவிருத்திக்கும் உங்களுடைய அனைவரது பங்களிப்பையும் முழுமையாக வழங்க வேண்டும் என்று அனைவருக்கும் இந்த இடத்தில் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 231ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரதீப் கமகே, 232ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் வசந்த ஹேவக்க, வாழைச்சேனை உதவிக் காவல்துறை அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர, கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜெயசிங்க, வாழைச்சேனை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, இராணுவ அதிகாரிகள், சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள நாட்டைக் காக்க யுத்தம் செய்து உயிர்த் தியாகம் செய்த நாற்பத்தி நான்கு (44) இராணுவ, காவல்துறை, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்து அவர்களின் குடும்பத்தினருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்தோடு மக்களுக்கு திறம்பட அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பிரதேச சபையினரால் கௌரவிக்கப்பட்டனர்.