முதலமைச்சர் கனவில் மிதக்கும் சிறீதரன்!

sritharan elluka tamil
sritharan elluka tamil

கிளிநொச்சி மாவட்டத்தின் முடிசூடா மன்னன் என அவரது தொண்டரடிப்பொடிகளால் புகழப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இப்போது ஒரே கனவு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதுதானாம். கனவு கண்டால் மட்டும் போதுமா அதை நனவாக்கித்தான் பார்ப்போமே என்ற நப்பாசையில் காய் நகர்த்தி அடிவாங்கி – நொந்து போயிருக்கிறாராம் அவர். அவரை விட நொந்துபோனது என்னவோ அவரது தொண்டரடிப்பொடிதானாம்.

அண்மைக்காலமாக மக்களால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும் கட்சியாக மாறி வருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முன்னர் கூட்டமைப்புக்கு மாற்றுத் தெரிவு இல்லாததால் தொடர் வெற்றியை ருசித்து வந்த அந்தக் கட்சிக்கு, இப்போது மாற்று அணியாக முன்னாள் வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி கொஞ்சம் நடுக்கத்தைக் கொடுத்து வருகிறது. இதனால், மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்ட சில பிரமுகர்களை எப்படியாவது கூட்டமைப்புக்குள் கொண்டு வரவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில், இப்போது ஊழலற்ற அதிகாரியாக தெரிவான மருத்துவர் சத்தியமூர்த்தியை நிறுத்தத் திட்டமிட்டது. வன்னிப் போர் காலத்தில் மருத்துவ சேவையை அப்பகுதியில் செய்த மருத்துவர் சத்தியமூர்த்திக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களிடையே பெரும் செல்வாக்கு உண்டு.

பிரதேசவாதத்தை முன்வைத்து கிளிநொச்சிக்குள் சொந்தக் கட்சியினரையும் அனுமதிக்காது மொத்தமாக வாக்கு வேட்டையாடி வரும் சிறீதரனை ஓரங்கட்ட நினைக்கும் அதே கட்சியைச் சேர்ந்தவர்களே, மருத்துவர் சத்தியமூர்த்தியை தெரிவு செய்தனர். இதற்காக அவரை முதலில் அணுகியபோது அவர் மறுத்துவிட்டார். ஆனால், இப்போது ஒருவாறு அவரை சமாளித்து வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் கிளிநொச்சியில் அவரைக் களமிறக்குவதே கூட்டமைப்பின் மூளையின் திட்டம். ஆனால், திடீரென முதலமைச்சர் கனவில் மிதக்கும் சிறீதரனோ, தான் அந்தப் பதவியை அடைந்தால் என்ன? என்ற நப்பாசை வந்துள்ளதாம். இதற்காக தனது விசுவாசி வேழமாலிகிதனை வைத்துக் காய் நகர்த்தியுள்ளார்.

இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடக்கும் தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவில், வேழமாலிகிதன் தலைமையிலான குழுவினர், “இம்முறை கிளிநொச்சிக்கு முதலமைச்சர் வேட்பாளர் வாய்ப்பு வழங்க வேண்டும். அதனை சிறீதரனுக்கே வழங்க வேண்டும்” எனக் கோரிக்கையை முன்வைக்கத் திட்டம் தீட்டப்பட்டதாம்.

சிறீதரனின் இந்தத் திட்டம் முன்னரே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குத் தெரிய வரவே, இதற்குக் காலாக இருந்த கிளிநொச்சியின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரை அழைத்து படு“டோஸ்” கொடுத்தாராம். திட்டம் கசிந்ததால் வெலவெலத்துப்போன முன்னாள் வடக்கு மாகாண அமைச்சரும் சிறீதரனும் இப்போது அமைதி காக்கின்றனராம்.

ஆனால், தனக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் அவர் “ஏன் எனக்கு முதலமைச்சராகத் தகுதி இல்லையா” என்று கேட்கிறாராம் சிறீதரன். என்ன பதில் சொல்வது அவருக்கு…?