கொரோனாவை விட பஷிலை கண்டே அச்சப்படுகின்றனர் – டிலான் பெரேரா

fcf1abe3defe96de0528451cf667788c XL
fcf1abe3defe96de0528451cf667788c XL

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை தற்போதைய அரசியல் களத்தில் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

எதிர்தரப்பினர் கொவிட் வைரஸ் தாக்கத்தை காட்டிலும் பஷில் ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை கண்டு அச்சம் கொண்டுள்ளார்கள். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அவரின் ஒத்துழைப்பு அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியினர் கொவிட், வைரஸ் தாக்கம், எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை மறந்து விட்டு தற்போது பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை குறித்து கருத்துரைக்கிறார்கள்.

கொவிட் தாக்கத்தை காட்டிலும் பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை குறித்து எதிர் தரப்பினர் அதிக அச்சம் கொண்டுள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வரும் தீர்மானம் கட்சியின் உள்ளக மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதனை பிற கட்சியினர் விமர்சிக்க முடியாது. பஷில் ராஜபக்ஷ பலம் வாய்ந்த அமைச்சு பதவியை பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் பல முறை எடுத்துரைத்துள்ளார்கள்.

வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த பஷில் ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு அவசியமானதாக அமையும்.முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அவர் பாரிய ஒத்துழைப்பு வழங்கினார்.

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு ராஜபக்ஷர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அவர் வகுத்த திட்டம் அனைத்து தேசிய தேர்தல்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது. ராஜபக்ஷர்களை பிளவுப்படுத்த ஒரு தரப்பினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எச்சக்தியாலும் ராஜபக்ஷர்களை பிளவுப்படுத்த முடியாது என்றார்.