மோசமான நிலையில் அந்நிய செலாவணிச் சந்தை – ஹர்ஷ டி சில்வா

har
har

இலங்கையில் அந்நிய செலாவணிச் சந்தையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கூறியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. முதலில் பிரச்சினையொன்று காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வதே தீர்வை எட்டுவதற்கான முதற்படியாகும். எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் அதனைச் செய்வதற்குத் தயாராக இல்லை. ஏனெனில் உண்மையில் அந்நிய செலாவணிச் சந்தை நிலைவரம் மிகவும் மோசமானதாகவே இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளியல் நிபுணருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருக்கிறார்.

உள்நாட்டு சந்தையில் வெளிநாட்டு நாணயத்திரவத்தன்மை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். ‘உள்நாட்டு சந்தையில் தற்போது அவதானிக்கப்படுகின்ற வெளிநாட்டு நாணயத்தின் திரவத்தன்மை நிலைமைகள் தற்காலிகமானவையாகும். அவை மிகையான ஊகங்களால் தூண்டப்பட்டுள்ளன’ என்று அவ்வறிக்கையில் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் அவ்வறிக்கையை மேற்கோள்காட்டி ஹர்ஷ டி சில்வா அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

‘முதலில் பிரச்சினையை ஏற்றுக்கொள்வதே தீர்வை எட்டுவதற்கான முதற்படியாகும் என்று கூறியது யார்? கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் எவரும் நிச்சயமாக அவ்வாறு கூறியிருக்கமாட்டார்கள்’ என்றும் ஹர்ஷ டி சில்வா அவரது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் அந்நிய செலாவணிச் சந்தையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்ற மத்திய வங்கியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.