ஒரு வாரத்திற்குள் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும் ஆபத்து – பந்துல குணவர்தன

banthula
banthula

பொருளாதார ரீதியாக நாடு பாரிய நெருக்கடி நிலையொன்றை சந்தித்துள்ளது, தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாவிட்டால் நாடே பாரிய நெருக்கடிக்குள் விழும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

நாட்டின் தற்போதைய கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இருந்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல தடைகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் இதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவோ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது எமது அரசாங்கமோ காரணம் அல்ல.

நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பது ஒரு நாளில் வருவதும் அல்ல, நீண்டகாலமாக தீர்வு காணப்படாத பிரச்சினைகள் இறுதியாக நெருக்கடியை உருவாக்கும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு 2015 ஆம் ஆண்டு அரசாங்கமே காரணமாகும். முன்னைய ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் விவசாயம் வீழ்ச்சி கண்டது, சகல ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டு இறக்குமதிக்காக நாடு திறக்கப்பட்டது.

131 ரூபாவில் இருந்த டொலருக்கான பெறுமதி நாம் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேளையில் 181 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை இனியும் முன்னெடுக்க முடியாது என்ற நெருக்கடி நிலையிலேயே ஆட்சி எமது கைகளுக்கு கிடைத்தது.

தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும். அவ்வாறான ஒரு நெருக்கடி நிலையில் நாம் உள்ளோம்.

அடுத்த வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக நாம் செலுத்தியாக வேண்டும், இவ்வாறு மிகப்பெரிய தொகையை கடனாக வழங்குவது இலகுவான விடயமல்ல. அவ்வாறு கொடுக்காது போனால் நாம் வங்குரோத்து நாடாக மாறுவோம்.

இப்போதே நாம் வீழ்ச்சி கண்ட நாடாக மாறியுள்ளோம். கடன் பெரும் நாடுகளில் பட்டியலில் இனி வீழ்ச்சி காண எமக்கு இடம் இல்லை. நாம் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வேளையில் கடன் பத்திரமொன்றை கையாள வேண்டும், அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களாக இருந்தாலும், எரிபொருள், உரம், திரவங்கள் போன்ற பொருட்களாக இருந்தாலும், இயந்திரங்கள் போன்ற மூலதனப்பொருட்களாக இருந்தாலும் கடன் பத்திரம் ஒன்றை முன்வைக்க வேண்டும். இது இல்லாது எதனையும் இறக்குமதி செய்ய முடியாது. தடுப்பூசிகளை கூட கொண்டுவர முடியாது. எனவே நாட்டின் நிலைமைகளை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கட்சி அரசியலை தாண்டி நாடு குறித்து சிந்திக்க வேண்டும், நாடே நெருக்கடியில் இருக்கின்ற வேளையில் ஒரு தரப்பு மீது பொறுப்பை சுமத்தாது சகலரும் ஒன்றிணைந்து எழுர்ச்சி பெற வேண்டும். நாம் இதுவரை எந்தவொரு கடனையும் திரும்ப செலுத்தாது கைவிட்டதில்லை. நாட்டில் இருக்கின்ற சகல பணத்தையும் சுரண்டியேனும் அடுத்த வாரம் இந்த கடன் தொகையை செலுத்திவிடுவோம், செலுத்தவில்லை என்றால் நாம் பாரிய நெருக்கடியில் விழுவோம் என்றார்.