ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் விடுவிப்பு!

1b129453 21 60f17f5f45e96
1b129453 21 60f17f5f45e96

முல்லைத்தீவு வான்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், ஆசிரியர் சங்கங்கள், இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில், 8 நாட்களின் பின்னர், முல்லைத்தீவு – கேப்பாப்புலவு வான்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து அவர்கள் இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பல்லேகலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி பொறியியல் கூட்டுத்தாபனம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டிந்த அவர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று(16) அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.