கொடையில் சிறந்த கொடை குருதிக் கொடை! இன்று உலக இரத்ததான தினம்!!

world blood donors day
world blood donors day


குருதிக் கொடையின் உன்னதத்தை அதிகம் உணர்ந்தவர்கள் ஈழத் தமிழ் மக்கள். குருதிக் கொடையிலும் உயிர்க்கொடையிலும் சிறந்து ஈழ மண். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பதைப்போல கொடையிற் சிறந்த கொடை குருதிக் கொடை என்றும் கூறுவோம். 

யூன் 14 – இன்று உலக குருதிக் கொடையாளர் தினமாகும். கொடுப்பவருக்கும் பொறுபவருக்கும் நன்மையளிக்கும் குருதிக் கொடையை உயிர்காக்கும் உன்னத செயல் என்றே கூற வேண்டும். 

உலக சுகாதார நிறுவனம்(WHO), இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த தான தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இத்தினம் ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாளாகவும் அமைவது மற்றொரு சிறப்பாகும். 

இரத்தம் தானம் செய்ய வேண்டியதன் அவசியமும், பாதுகாப்பான இரத்த பரிமாற்றம், ரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்டும் உடலுக்கு தேவையான பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நாள் உயிர் காக்கும் உன்னத செயலின் புனிதத்தை எடுத்துரைக்கின்றது. 

ஈழப் போரின் போது காயப்பட்ட மக்கள் குருதி இழப்பால் தவித்தனர். குருதிக் கொடையின் அவசியத்தை யுத்தமே நன்கு உணர்த்திவிடுகிறது. எனினும் கடும் போர்க்காலத்திலும் குருதிக் கொடையை அதிகம் இடம்பெறுவதும் ஈழத்தின் வடக்கு கிழக்கில்தான். 

கிளிநொச்சி மகா வித்தியாலய பழைய மாணவர்கள் போரில் கொல்லப்பட்ட தமது சக மாணவர்களின் நினைவாக ஆண்டு தோறும் “அன்று சிந்தியதை இன்று கொடை செய்கிறோம்“ என்ற தொனிப்பொருளில் குருதிக் கொடை முகாமை நடாத்துவது ஒரு முன்னுதாரணமான செயலாகும். 

இன்றைக்கு இளைஞர்கள், பாடசாலை உயர்தர மாணவர்கள் எனப் பலரும் குருதிக் கொடையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிப்பதற்கும் கௌரவிப்பதற்கும் இந்த நாள் பொருத்தமானவொரு தினமாகும்.