தமிழரின் அபிலாசையை ஏற்கும் எவருடனும் இணைந்து பேசவும் செயற்படவும் தயார்: சம்பந்தன்

r sampanthan
r sampanthan

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக நியாயமான அரசியல் தீர்வொன்றை பெறுவதற்காக எமது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. அதற்காக நாம் எவருடனும் பேசுவதற்கு தயாராகவே உள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் பொதுஜனபெரமுனவின் ஆட்சியமைந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்குமா என்று எழுப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அப்பதிலில் அவர் மேலும் தெரிவித்தாவது, 

எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வுக்காக எமது கதவுகள் திறந்துள்ளன. அக்கதவினூடாக எமது மக்களுக்கு ஏற்புடையதான அரசியல் தீர்வொன்று வரவேண்டும் என்பதே நிலைப்பாடாகவுள்ளத,   எமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நாங்கள் எவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளோம்.

அத்துடன் அவர்களோடு இணைந்து செயற்படவும் தயாராகவே உள்ளோம். பொதுஜன பெரமுனவாக இருக்காலாம், ஐக்கிய தேசிய கட்சியாக இருக்கலாம். ஐக்கிய மக்கள் சக்தியாக இருக்கலாம் வேறெந்த தரப்பாகவும் இருக்கலாம். யாரையும் பகைப்பதற்கு நாம் விரும்பவில்லை. எல்லோருடனும் சேர்ந்து பயணிக்கவே விரும்புகின்றோம். எங்கள் மக்கள் நலன் கருதியும், நாட்டின் நலன் கருதியும் அனைவரின் ஆதரவுடனும் ஒற்றுமையாக செயற்படவும் தயாராகவே உள்ளோம் என்றார். 

இதேவேளை, நடைபெறவுள்ள தேர்தலில் தென்னிலங்கை மக்களுக்கு என்ன செய்தியை வழங்கத்தயாராகின்றீர்கள் என்று வினவியபோது அதற்குப் பதிலளித்தவர், 

சிங்கள மக்கள் மத்தியில் தற்பொழுது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ராஜபக்ஷவின் அழைப்பையேற்று கூட்டமொன்றில் பங்குபற்றிக் கொண்டோம். அதைத் தொடர்ந்து அவரைச் சந்தித்தது கலந்துரையாடினோம். எங்களுக்கிடையில் பகைமையில்லை. நாங்கள் ஒருமித்து செயற்படலாம். பிரிபடாத ஒருமித்தநாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்பது எமது உறுதியான நிலைப்பாடு. 

அதை இப்பொழுது சிங்கள மக்கள் மதிக்கிறார்கள். சிங்கள மக்கள் கடுமையாக நாடு பிரிபடுவதையே எதிர்க்கின்றார்கள். ஆனபடியால் நாங்கள் அதற்கான உத்தரவாதத்தினை வழங்க வேண்டும். அதன் மூலம்  நல்லதொரு நியாயமான தீர்;வை காணவேண்டும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வேண்டுமோ அதைதெளிவாக தெரிவிப்போம் என்றார்.