கருணா பயங்கரவாதியாக இருக்கையில் படைகளை கொன்றதை நாடே அறியும்! லக்ஷ்மன்

lakshman
lakshman

கருணா அம்மான் பயங்கரவாதியாக செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான இராணுவத்தை கொலை செய்தார் என்பது முழு நாடும் அறியும் எனவும் போர் ஒன்றின் போது இராணுவத்தினரை கொலை செய்ய நேரிடுவது சாதாரணமான விடயம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பத்தரமுல்லையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

“ பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்த விடயம் சம்பந்தமாகவே கருணா அம்மான் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார் என நினைக்கின்றேன். கருணா அம்மான் கொரோனாவை விட பயங்கரமானவர் என கூறியிருந்தனர். இதனால், போர் காலத்தில் அவர் பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்ற வகையில் இத்தனை இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் கூறினார்.

அது இரகசியமல்ல. கிழக்கு மாகாணத்தில் தாக்குதல்கள் தொடர்பாக நாட்டு மக்கள் மிகவும் புரிந்துணர்வுடன் உள்ளனர். பயங்கரவாத தலைவராக அவர் செய்ததை நாங்கள் தனிப்பட்ட ரீதியில் ஏற்காவிட்டாலும் பயங்கரவாத அமைப்புக்கும், இராணுவத்திற்கும் இடையில் போர் நடக்கும் போது இப்படியான நிலைமைகள் ஏற்படும். கருணா தலைமை வசித்து அவரது பயங்கரவாத அமைப்பை வெற்றி பெற செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். நாங்கள் இராணுவம் என்ற வகையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இதற்கு சமமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இவை போரில் நடக்கும் விடயங்கள்.

எனினும் சாதாரண நிலைமைக்கு மாறிய பின்னர் தான் கடந்த காலங்களில் செய்த தவறுகளை பல சந்தர்ப்பங்களில் மறந்து விடுகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சிகாலத்திலும் ஒரு பக்கத்தை சேர்ந்த பெருந்தொகையான இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

மறுபுறம் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். இவர்கள் அனைவரும் தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர். கருணா அம்மானும் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

தற்போதும் அந்த பிரதேச மக்கள் விரும்பினால் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள்” எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.