இந்த தேர்தலில் நீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தரும்!- சி.வி!

cv
cv

தேர்தலின்போது மக்களாகிய நீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத்தருவதாக அமையட்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் நிதியத்தை அமைத்து புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள பகீரத பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் அரசாங்கம் அதனை செய்யவிடாத காரணம் நிதியம் அனுமதிக்கப்பட்டால் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று நினைத்துப்போலும்.

கூட்டமைப்பின் தலைவர்கள்கூட அவ்வாறு நினைத்தார்களோ என்னவோ அந்த நிதியத்தை உருவாக்கும்படி  தாங்கள் முண்டுகொடுத்து வந்த அரசாங்கத்திடம் ஒரு போதும் கேட்கவில்லை.

முற்றுமுழுதாக எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தாமல் வெறுமனே அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டே கூட்டமைப்பு செயற்பட்டு வந்திருக்கின்றது.

ஆகவே, மக்களே  தயவுசெய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் வாக்களியுங்கள்.

எனது வாழ்நாளில் நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான், இன்று தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பினை இந்தத் தேர்தலின் ஊடாக வழங்குமாறு எனதருமை மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நீங்கள் வழங்கும் இந்த தீர்ப்பு எமது தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு எமக்கு வலுச் சேர்ப்பதாக அமையட்டும், இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அமையட்டும்.

உங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாக அமையட்டும், நீங்கள் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக அமையட்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.