கோட்டாவின் ஆட்சியில் அனைத்தும் இராணுவமயம்!!

365
365

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றம், மாகாண சபைகள் உட்பட ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் இராணுவ மயப்படுத்தப்பட்டுவிடும்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ள பல உறுப்பினர்களுக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தபாய ராஜபக்ச அனுமதி வழங்கமாட்டார்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு நிபுணரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பத்தி விக்ரமரட்ண இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

“கோத்தபாய ராஜபக்ச என்பவர் தனிநபர் அல்ல. அவருக்குப் பின்னால் தெளிவான நோக்கங்களைக் கொண்ட சக்திகள் உள்ளன. ஒருபுறம் கடுமையான இராணுவமயமாக்கல் குறித்த சிந்தனை கொண்டவர்களும், மறுபுறத்தில் இனவாதிகள் இருக்கின்றனர்.

இந்த நாட்டில் கடுமையான ஆட்சி முறை வேண்டும் எனவும், சுதந்திரத்தை வரையறுக்க வேண்டும், அடிப்படை உரிமைகளினால் பிரயோசனமில்லை, ஜனநாயகத்திற்கு எல்லை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பேசுகிறவர்கள் அவருக்குப் பின்னால் இருக்கின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் மிகவும் கொடூரமான ஆட்சிமுறையை எதிர்பார்க்கலாம். ஜனநாயகம் இல்லாமை, ஊடகசுதந்திரம் பறிப்பு, சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நிகழலாம்.

பொதுஜன முன்னணியில் ஜனநாயகத்தை மதிக்கின்ற சிறு தரப்பினர் இருக்கலாம். அவர்களுக்கும் அடுத்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு சந்தர்ப்பமும் கிடைக்காது. குறிப்பாக சுதந்திரக் கட்சியினர் அவரவருக்கே குழிதோண்டியுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் உருவாக்கப்பட்ட சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பினர் எம்முடன் இணைகின்றனர்.

நட்பான கட்டளையார் ஆட்சிக்குவந்தால் இடதுசாரி தரப்பினருக்கு நல்லது என்று சிலர் கூறுவதை அவதானித்தேன். உலகில் நட்புரீதியிலான கட்டளையாளர் ஆட்சிக்கு வந்ததில்லை. வந்தாலும் அவர் நட்புரீதியாக செயற்படுவதும் இல்லை.

ஆகவே நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தும் ஆட்சியே கோத்தபாய ராஜபக்ச எதிர்பார்க்கின்றார். நாடாளுமன்றத்திற்கு, அரச உயர்மட்ட பதவிகளுக்கு இராணுவத்தினரை ஈடுபடுத்த அவர் திட்டமிட்டிருக்கின்றார்.

கோத்தபாயவுடன் இணைந்துள்ள மேஜர் கமல் குணரத்ன, சரத் வீரசேகர ஆகியோருக்கு உயர்பதவிகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல கடும்போக்குவாத பௌத்த பிரிவினருக்கும் உயர்பதவிகள் வழங்கப்படலாம்.

இன்று நீதிமன்றக் கட்டமைப்பிலுள்ள சுயாதீனத்துவம் கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் இல்லாமல் போய்விடும். எனவே கோத்தபாயவின் ஆட்சி வந்தால் பயப்படாமல் இருக்கமுடியாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.