கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் காவல்துறையினரிடம் மகஜர் கையளிப்பு!

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் அச்சமாக உள்ளது என தெரிவித்து பிரதேச மக்கள் ஒன்றுகூடி காவல்துறையினரிடம் மகஜர் கையளித்தனர்.

இன்று (20) காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர்களையும் அழைத்திருந்தனர்.

இதன்போது அங்கு கிளிநொச்சி தலைமை காவல்துறை பொறுப்பதிகாரியும் உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தனர்.

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை நிலையத்தினால் தாம் அச்சமுறுவதாகவும், இவ்விடயம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்ததுடன் காவல்துறையினருக்கு அவர்கள் விளக்கமளித்திருந்தனர்.

குறித்த காணியானது 14 பேருக்கு சொந்தமான காணி எனவும், அது இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு அரச அதிபரிடம் கையளிகக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் காவல்துறையினரிடம் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் காவல்துறை அதிகாரி அரசாங்க அதிபரிடம் பேசுவதாகவும், வைத்தியசாலையானது இப்பகுதி மக்களிற்காகவே பயன்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு வழங்கிய மகஜரை காவல்துறையினருக்கும் வழங்கி வைத்தனர். இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசி அங்கு தெரிவிக்கப்படும் கருத்தினை மக்களிற்கு தெளிவுபடுத்துவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வழங்கி வைக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமது கிராமத்தில் பல்வேறு இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அதாவது 1977, 1983 காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி பல்வேறு இன்னல்களிற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.

எமது கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள நவம் அறிவுக்கூடம் என்று அன்றைய காலத்தில் 12 ஏக்கர் காணியில் இயங்கி வந்த கட்டடத் தொகுதி பின்னர் இராணுவ பயிற்சி முகாமாக இயங்கி வந்தது. குறித்த பகுதி சிறிது நாட்களிற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. அத்தருணம் எமக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்த விடயமாக இருந்தது. தற்பொழுது வந்துள்ள செய்தியானது எமது மகிழ்ச்சியில் இடி வீழ்ந்துள்ளது.

இந்த நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 75 மீட்டர் தூரத்தில் கிளிநொச்சி இராமகிருஸ்ண வித்தியாலயம் அமைந்துள்ளது. கிராம அலுவலர் அலுவலகம், சமுர்த்தி அலுவலகம், அபிவிருத்தி உத்தியோகத்தரின் அலுவலகம் போன்றவையும் 75 மீற்றர் தூரத்திற்குள் அமைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த பாடசாலையில் 80 மாணவர்கள் வரையில் கல்வி கற்கும் அதே நேரம் ஆசிரியர்கள் உட்பட 100பேர் அங்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலகம் போன்றவற்றில் நாளாந்தம் 100க்கு மேற்பட்ட மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வது வழக்கமான இடமாகவும் அமைந்துள்ளது. எமது கிராமத்தின் அனைத்து நிர்வாக செயற்பாடுகள் இடம்பெறும் மிக முக்கிய மையப்புள்ளியாகவும் குறித்த பகுதி காணப்படுகின்றது. அதேவேளை 937 குடும்பங்கள் இக்கிராமத்தில் வாழ்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது கொரோனா மத்திய நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதையிட்டு எமது கிராம மக்கள் பெரும் பயப்பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் குறித்த நிலையத்தை இங்கு அமைப்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.