மாவீரர்களை நினைவு கூர தமிழருக்கு உரிமையுண்டு இராணுவத் தளபதிக்கு சம்பந்தன் பதிலடி!

sampanthan3 1
sampanthan3 1

தமிழினத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை – தமது உறவுகளை நினைவுகூர வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமையுண்டு. அதைச் சட்டங்கள் கொண்டு தடுத்துநிறுத்த இராணுவத் தளபதிக்கோ அல்லது வேறு எவருக்குமோ எந்த அதிகாரமும் இல்லை.என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திட்டவட்டமாகத்தெரிவித்துள்ளார்

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள். தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி தமது உயிரை ஈந்த வீரமறவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நாள். ஆனால், இம்முறை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் மாவீரர் நாளைப் பொதுவெளியில் நினைவேந்தத் தனிமைப்படுத்தல் சட்டத்தைக் காரணம் காட்டி கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத் தளபதியின் இந்த எச்சரிக்கை தொடர்பில் கருத்துரைக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவதுஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளமை தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, எமது மக்கள் அந்தச் சட்டத்திலுள்ள சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி – சமூக இடைவெளியைப் பேணி உயிர்நீத்த தமது உறவுகளை எதிர்வரும் 27ஆம் திகதி நினைவுகூருவார்கள். இதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. அவ்வாறு தடுத்து நிறுத்துவது பாரிய மனித உரிமை மீறலாகும்.

கடந்த ஆட்சியில் ஒவ்வொரு நவம்பர் 27ஆம் திகதியிலும் தமிழ் மக்கள், உயிர்நீத்த தமது உறவுகளை அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று மலர் தூவி அஞ்சலித்து நினைவுகூர்ந்தார்கள். இதை இந்த ஆட்சியிலும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

வேண்டுமென்றே நீதிமன்றங்களை நாடி தடை உத்தரவுகளைப் பெறும் நடவடிக்கைகளை இந்த அரசு கைவிட வேண்டும்எனவும் அவர் மேலும் தெரிவித்தார்