ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அலிசாஹிர் மௌலானா இராஜினாமா!

ali zahir mowlana

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நாள் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஓர் அபகீர்த்தி ஏற்படுத்திய நாளாக அமைந்துவிட்டது. எமது நாட்டின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, என்னுடையதும், இரண்டு மில்லியன் முஸ்லிம்களினதும் இதய நரம்புகளை பிடிங்கி எடுத்தது போலுள்ள வேதனையில் ஆழ்த்தியதுடன் எங்களது கண்ணியத்தையும், எங்களது அதிமுக்கிய அடிப்படை உரிமையையும் இந்த நாட்டின் பிரஜைகளான முஸ்லிம்களுக்கு மறுத்திருக்கிறது.

மிகவும் கவலை தோய்ந்த மனதுடன் மேற் குறிப்பிடப்பட்ட விடயம் சம்பந்தமாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது யாதெனில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில் இருந்து உடனடியாக நான் விலகிக் கொள்கிறேன் என்பதாகும்.

தேர்தலில் வெல்லும் வரை மக்களை உணர்ச்சியூட்டி, தேசிய அரசியல்வாதிகளை அழுது புரண்டு வாக்குகளை சேகரித்து விட்டு வெற்றிக்கு பிற்பாடு அனைத்தையும் புறந்தள்ளி விட்டு எதை எல்லாம் விமர்சித்து உரையாற்றினார்களோ அவற்றை எல்லாம் மறந்து அரசியல் திருத்தத்திற்கு ஆதரவளித்தமையை அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் முஸ்லிம் சமூகம் முகம்கொடுக்கும் பாரதூரமான துன்புறுத்தல்களையும் சமூக பிரச்சினைகளையும் புறந்தள்ளி, கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக சுயநல நோக்கையும் அவரவர் தேவைகளை அடைவதை மாத்திரமே குறியாகக்கொண்ட கட்சியின் பிரதிநிதிகள் சென்றமை எந்த வகையில் ஏற்புடையது? என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படாமல் எரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பில் அவர் தனது கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளதுடன் அரசாங்கம் இவ்வாறான ந்டவடிக்கை எடுத்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை தொடர்பில் கவலையையும் வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம் சமூகம் இலங்கையிலே மிகவும் பாரிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், மிகவும் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்ததின் உச்சகட்டம்தான் இத்தீர்மானத்தை இவ்வாறு மேற்கொள்ள வைத்துள்ளது.என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.