உள்ளூராட்சி சபைகளுக்கு மத்திய அரசு நிதிகளை ஓதுக்கீடு செய்ய வேண்டும்-துரைரெத்தினம்

download 3 4
download 3 4

உள்ளூராட்சி சபைகளில் உள்ள வளங்களை உள்ளூராட்சி சபைகள் பயன்படுத்துவதோடு, மத்திய அரசு நிதிகளை ஓதுக்கீடு செய்ய வேண்டுமென கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஊடக அறிக்கை ஒன்றை இன்று (08) வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாநகரசபை ,நகரசபை, பிரதேசசபைகளில் குறிப்பாக, கோறளைப்பற்று வடக்கு (வாகரை), மண்முனைமேற்கு (வவுணதீவு), மண்முனை தென்மேற்கு (கொக்கட்டிச்சோலை), போரதீவுப்பற்று(வெல்லாவெளி) பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு வருமானம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இதே நேரம் மாநகர, நகர சபைகளுக்கு அதிகமாகவும் வருமானம் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கோறளைப்பற்று(வாழைச்சேனை), ஏறாவூர்பற்று(செங்கலடி), மண்முனைப் பற்று (ஆரையம்பதி) போன்ற உள்ளூராட்சிசபைகள் வருடாந்த வழமையான  நிர்வாகத்திற்குட்பட்ட வேலைகளை செய்வதற்கு நிதி போதுமானது. ஆனால் வருமானம் குறைந்த உள்ளூராட்சி சபைகளின் வருமானத்தை வைத்துக் கொண்டு பல வேலைத் திட்டங்களைச் செய்ய முடியாது. குறிப்பாக வரட்சி காலத்தில் குடிநீர் வழங்குவதற்குக் கூட வருமானம் போதாத சபைகளும் உள்ளன.

இவ்வாறான நிலையில் பன்முகத்தன்மை கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய புதிய உள்ளூராட்சி சட்டங்களை உள்ளடக்கி வட்டார ரீதியாகவும், வீகிதாசார ரீதியாகவும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு பன்முகத்தன்மை கொண்ட சபைகள் இயங்கிக் கொண்டு வருகின்றன.

இச்சபைகளைப் பொறுத்தவரையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டாலும் பெரும்பான்மையாக உள்ள சபைகளில் தலைவர்கள், உப தலைவர்கள், தவிசாளர், உதவித் தவிசாளர், முதல்வர்,பிரதி முதல்வர், குழுத்தலைவர்கள், எதிர்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஊழல் செய்வதில் நாட்டம் காட்டவில்லை. மிகவும் சிறப்பான முறையில் அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் உள்ளூராட்சி சபைகளை இருக்கின்ற வருமானத்தைக் கொண்டு நடத்துவதில் அக்கறை உடையவர்களாக இருப்பதை மக்கள் பாராட்டுகின்றனர்.

ஆயினும் இவர்கள் பகுதிகளிலுள்ள வளங்களை ஏன் பயன்படுத்தவில்லை, உள்ளூராட்சி சபைகளுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மத்திய அரசும், வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களும். மாகாண சபையும் ஏன் நிதிகளை அதிகமாக ஒதுக்கவில்லை. அரசிடம் நிதி இல்லையா? அல்லது நிதிகளைக் கொண்டு வருவதற்கு தடைகள் உள்ளனவா? 30 வருடங்களுக்கு பின் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டது ஜனநாயக ரீதியில் நன்மைகள் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட வருடத்திற்குள் நல்லாட்சி முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தவகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா, டெங்கு, வெள்ளம், சுற்றாடல், வரட்சி தொடர்பாகவும் உள்ளூராட்சி சபைகளில் கடமை செய்கின்றவர்களில் நலன்கள் தொடர்பாகவும் முன்னேற்றகரமான செயல் வடிவங்களை கொடுத்துள்ளனவா?

உள்ளூராட்சி சபைகளில் தற்காலிகமாக கடமை செய்கின்ற 700பேருக்கு மேற்பட்டவர்களில் சுற்றுநிருபம் வெளிவந்தும் நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் உள்ள நிலையில் கொரோனாவிற்காக மத்திய அரசாங்கம் வாழ்வாதார உதவிகள் செய்கின்ற நிலையில் உள்ளூராட்சி சபைகளில் தற்காலிகமாக கடமை செய்கின்றவர்களுக்கு குறிப்பிட்ட தினங்களுக்கு மட்டும் வருமானம் இல்லையென வேலை நாட்களை குறைப்பது நீதியானதா? என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.