கிழக்கு ஆளுநராக தமிழர் நியமிக்க துரைரட்னம் கோரிக்கை

thurai retnam
thurai retnam

கிழக்கு ஆளுநராக தமிழர் ஓருவரை நியமிக்குமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்‌ஷ சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் தமிழ் மக்களுக்கு செய்யும் சேவையூடாக அம்மக்களின் விரக்தியிலிருந்து போக்குவீர்கள் என்னும் நம்பிக்கை எமக்கு உண்டு.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்த வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் சமூக நலனோடு மூன்று இனங்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உங்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்கள் முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

கிழக்கு மாகாணம் என்பது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மாகாணமாகும். வடக்கிற்கு தமிழர் ஓருவர் ஆளுனராக நியமனம் செய்யப்பட்டதைப் போல் கிழக்கு மாகாணசபைக்கும் கட்சி நலன்பாராது, இனம்பாராது, மதம்பாராது ஊழல்மோசடியற்ற நல்லதொரு தமிழ் ஆளுநர் ஒருவரை நியமித்து தாங்கள் முன்னுதாரணமாக எல்லா இன மக்களுக்குமான ஜனாதிபதி என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

நல்ல செயற்திட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் மனங்களை இனியாவது வெல்வதற்கு வழிசமைப்பீர்கள் என நம்புகின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.