வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள உருவாக்க 10 வருடங்கள் தேவை – நா. உ திலீபன்

DSC07495 1
DSC07495 1

வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.

நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியல் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் றம்பைவெட்டி கிராமத்தில் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் அரச அதிபர் சமன்பந்துலசேன, பிரதேச செயலாளர் ந.கமலதாசன் ஆகியோர் மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

மரநடுகை நிகழ்வுகள் போலியான வகையில் இடம்பெறக்கூடாது. இந்த திட்டம் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன். மக்களிற்காகவே மரங்கள், எனவே கிராமங்கள், ஆலயங்கள், மைதானங்களிற்கு அண்மையில் மரங்களை நடமுடியும். வவுனியாவை பொறுத்தவரை பத்து வருடங்களிற்கு இப்படியான திட்டத்தினை நடைமுறைப்படுத்தினாலேயே காணாமல் போன மரங்களிற்கு ஈடுசெய்யமுடியும். தற்போது அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளரின் துரித நடவடிக்கைகளால் ஓரளவு அது கட்டுப்பாடிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த விடயம் தொடரவேண்டும்.

வில்பத்து என்ற இடத்திலும் காடழிப்பு இடம்பெற்றிருந்தது. கேட்டால் குடியேற்றம் என்கிறார்கள். உரிய அதிகாரிகளிடம் கேட்டால் குடியேற்றத்திற்கு உகந்த இடத்தினை ஒதுக்கி கொடுத்திருப்பார்கள். காடுகளை அழித்து அதனை செய்யவேண்டிய தேவையில்லை. அத்துடன் நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் வரும் காலங்களில் ஆழ்துளைகிணறுகள் அமைக்கும் பணியினை நிறுத்துவதற்கு முயற்சி எடுக்கவேண்டும். என்றார்

நிகழ்வில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சதீஸ்குமார், கிராமசேவையாளர் தர்சன், பொதுஅமைப்பினர், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதேவேளை கிராம மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.