புதுக்குடியிருப்பில் 194 பேர் தனிமைப்படுத்தல்!

ptk 13
ptk 13

புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மரக்கறி மொத்தவியாபாரத்தில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடைய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறியமுடிகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாறாக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்று வெளியான முடிவுகளில் (26) ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று(26) நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று 416 பேரின் பி.சி.ஆர் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியை சேர்ந்த மரக்கறி மொத்த வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தம்புள்ள பகுதிக்கு சென்று மரக்கறிகளை பெற்று வந்து புதுக்குடியிருப்பு உடையார்கட்டு விசுவமடு சந்தை வியாபாரிகளுக்கு வழங்கும் நபர் என முதல்கட்ட விசாரணைகளில் உறுதியாகியது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தம்புள்ளவிற்கு செல்பவர்கள் உள்ளிட்ட மரக்கறி வியாபாரிகள் சிலரிடம் அண்மையில் எழுமாறாக பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டது. எழுமாறாக பி.சி.ஆர் மாதிரிகளை பெற்றமையால், மாதிரிகள் பெறப்பட்ட யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. இப்படி, மாதிரி பெறப்பட்ட ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (26) மாலை பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கும் வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடியுள்ளார். இதனால் புதுக்குடியிருப்பு பகுதி அபாய வலயமாகுமா என மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ள நிலையில் குறித்த நபர் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இரானுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு சுகாதார அதிகாரிகள் குறித்த நபர் நடமாடிய இடங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு அவர் கிளிநொச்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நோயாளர் காவுவண்டியில் அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் மரக்கறி மொத்தவியாபாரத்தில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடைய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறியமுடிகிறது.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பாக இராணுவத்தினர் சந்தை வளாகம் மற்றும் வர்த்தக தொகுதிகளை கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதே நேரம் காவல்துறையினர் குறித்த தொற்றாளியுடன் தொடர்புகளை மேற்கொண்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அத்துடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கிராமங்களுக்குச் சென்று குறித்த தொற்றாளியுடன் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டிருந்த நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.

இப்பகுதிகளில் சந்தை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல இடங்களிலும் மீன் வியாபாரம் மற்றும் மரக்கறி வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்ததொற்றாளி தம்புள்ள சந்தையில் இருந்து மரக்கறிகளை புதுக்குடியிருப்பு விசுவமடு உடையார்கட்டு உள்ளிட்ட சந்தைகளுக்கு விநியோகம் செய்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(26) இரவு வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடி இருப்பதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.