குப்பைகளை அகற்றுமாறு பல்கலை மாணவர்கள் கோரிக்கை

IMG 7804
IMG 7804

இராமநாதன் வீதி சேர்.பொன் இராமநாதன் வீதி யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள குறித்த பகுதியில் மிக நீண்ட நாட்களாக குப்பை தேங்கி காணப்படுகின்றது.

பல்கலைக்கழக சூழல் யாழ்.மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் வருவதால் அங்கு தேங்கும் குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படுவதில்லை. அங்கு தேங்கும் குப்பைகளை அகற்றுமாறு கோரிக்கை முன்வைக்கப்படும் போது, குறித்த இரு சபையினரும் தமது எல்லை தொடர்பில் குறிப்பிட்டு குப்பைகளை அகற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகமாக செறிந்து வாழும் பகுதியாகவும், யாழ்.பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி ஆகியன அமைந்திருக்கும் பகுதியாக அப்பகுதி உள்ள நிலையில் அங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளினால் பொது மக்களும், மாணவர்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மேலும் குறித்த பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று நல்லூர் பிரதேச சபையினால் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ள போதும், பொது மக்கள் இரவு நேரங்களில் பெறுப்பற்ற வகையில் அங்கு வந்து குப்பைகளை கொட்டுகின்றார்கள் என்றும் பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் எடுத்து, அங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி அங்கு ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கோட்டை முடிவுக்கு கொண்டு வருமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தி, குப்பை கொட்டுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.