கிளிநொச்சியில் மேச்சல் இல்லாது மாடுகள் இறப்பதனால் கால்நடை வளர்ப்போர் கவலை

Konavil News 25 1
Konavil News 25 1

கிளிநொச்சி மாவட்டத்தில் மேச்சல் இல்லாது மாடுகள் இறந்து வருகின்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் எந்த பகுதியிலும் மேச்சல் தரை இல்லாமையினால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கால போக செய்கை மேற்கொள்ளப்படும் காலப்பகுதியில் தமது கால்நடைகளிற்கான மேச்சல் தரையை அடையாளம் காண்பித்து அவற்றுக்கு உணவளிப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் இவ்வாறான காலப்பகுதயில் வேறு பிரதேசங்களிற்கு தமது கால்நடைகளை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் தற்போது வேறு பிரதேசங்களில் கால்நடைகளை கொண்டு சென்று உணவளிப்பதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகள் மேச்சல் இல்லாது உயிரிழந்து வருகின்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இவ்வாறு மேச்சல் இல்லாது உயிரிழந்துவரும் கால்நடைகளை பாதுகாப்பதற்கு பண்ணையாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாடுகளிற்கு குளுக்கோஸ் (சேலைன்) ஏற்றி அவற்றை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவயதிலிருந்து கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தங்கவேலு சுரேந்திரன் என்பவர் 500க்கு மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றார். அவற்றில் இதுவரை 7 மாடுகள் இறந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். மேலும் சில மாடுகளிற்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றார். இதுபோன்று பலரது கால்நடைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் கிளிநொச்சி கால்நடை வைத்திய அதிகாரிகள் கால்நடைகளை பார்வையிட்டு சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமது பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது மாவட்டத்தில் எந்தவொரு பகுதியிலும் மேச்சல் தரை இல்லாத நிலை காணப்படுவதாகவு்ம், மீள்குடியேறிய காலப்பகுதியிலிருந்து அதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்கு தீர்வு எட்டப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.