வடக்கில்உள்ள சந்தைகளை உடனடியாக திறப்பது சாத்தியமில்லை -வைத்தியர் ஆ கேதீஸ்வரன்!

Northern Province Health Services Director Dr.Ketheeswaran
Northern Province Health Services Director Dr.Ketheeswaran

மருதனார் மடம் சந்தையை மீள திறக்குமாறு சில கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. நேற்றும் மருதனார்மட சந்தையுடன் தொடர்புடைய 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சந்தைகளை மீள திறப்பது ஆபத்தானது. தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர்தான் மருதனார்மடம் சந்தை மற்றும் ஏனைய சந்தைகளை மீள திறக்க ஆலோசனை வழங்குவோம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

இன்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று வடமாகாணத்தில் 676 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் 12 பேரும், முல்லைத்தீவில் ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ்ப்பாணத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து 8 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து 3 பேரும், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்து 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் முடியும் போது பிசிஆர் பரிசோதனைக்குள்ளாக்கியதில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களையும் சேர்த்து மருதனார்மட கொத்தணியில் 130 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து 57 பேர், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து 34 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து 21 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து 8 பேர், சங்கானை, கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து தலா 4 பேர், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து தலா ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து ஒருவர் அடையாளம் காணப்பட்டார். ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மரக்கறி வியாபாரியின் மனைவியே அவர். அங்கு இரண்டாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் டிசம்பர் மாதத்தில் நேற்று (30) வரை 152 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ் மாவட்டத்திலிருந்து 134 பேர், வவுனியா மாவட்டத்திலிருந்து 10 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 பேர், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 2 பேர், மன்னார் மாவட்டத்திலிருந்து ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.

மருதனார் மடம் சந்தையை மீள திறக்குமாறு சில கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. நேற்றும் மருதனார்மட சந்தையுடன் தொடர்புடைய 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சந்தைகளை மீள திறப்பது ஆபத்தானது. தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர்தான் மருதனார்மடம் சந்தை மற்றும் ஏனைய சந்தைகளை மீள திறக்க ஆலோசனை வழங்குவோம் என்றார்.