அமைச்சரவை சுற்றறிக்கைக்கேற்ப அரச காடுகளை பயன்படுத்தல் தொடர்பான கலந்தரையாடல்!

kachcheri 12
kachcheri 12

வன ஜீவராசிகள் மற்றும் வன பரிபாலன அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப ஒதுக்கப்பட்ட காடுகள் தவிர்ந்த ஏனைய அரச காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்தும் நோக்கில் பிரதேச செயலாளர்களிடம் கையளிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான கலந்தரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(31) மு.ப 9.30மணிக்கு மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது சுற்றாடல், வன ஜீவராசிகள் வளங்கள் மற்றும் காடுகள் என்பவற்றிற்கு பங்கம் ஏற்படாத வகையில் பொருளாதார மற்றும் ஏனைய உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளுக்காக ஏனைய அரச காடுகளை பயன்படுத்துவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் முடியுமான வரை செயலாற்றுவதற்கு அனுமதியளிக்கும் குறித்த சுற்றறிக்கையின்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலின் முதற்கட்டமாக பிரதேச செயலாளர்களுக்கு கையளிக்கப்படக் கூடிய காணிகள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள், வனஜீவராசிகள், வன வள, நில அளவை, நீர்ப்பாசன திணைக்கள மற்றும் காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவு சார்ந்த அதிகாரிகள் இணைந்த குழுவின் கள விஜயம் ஊடாக விடுவிக்கப்படக் கூடிய காணிகளை ஆராய்ந்து பிரதேச காணிப்பயன்பாட்டுக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்து பொருத்தமான தொடர் நடவடிக்கையினை முன்னெடுத்துச் செல்வதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர், சிரேஸ்ட நில அளவை உதவி மாவட்ட அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், கேப்பாபுலவு இராணுவ கட்டளை அதிகாரிகள், மாவட்ட உதவி வன வள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.