ஜெனிவா பிரேரணையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!

IMG 20210101 WA0036
IMG 20210101 WA0036

காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்களால், மார்ச் மாதத்தில் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் வலியுறுத்தகோரி மின் அஞ்சலொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுவருடதினமான இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “எமது போராட்டம் இன்றுடன் 1414 நாட்களை எட்டுகின்றது. முக்கியமாக இந்த ஆண்டு மார்ச் மாதம்,  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஒரு முக்கியமான முடிவை எடுக்க உள்ளது. அவர்களின் புதிய தீர்மானத்தில் சேர்ப்பதற்காக நாம் முன்வைத்துள்ள யோசனையை அனைத்துநாடுகளும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

காணாமல்ஆக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் சார்பாக சக்திவாய்ந்த நாடுகளுக்கு நாங்கள் எழுதியவற்றின் சுருக்கமான தோற்றத்தை இங்கே தெரிவுபடுத்த விரும்புகிறோம். பின்வரும் விடயங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அமுல்ப்படுத்த கேட்டுக்கொள்கிறோம். மார்ச் 2021 தீர்மானத்தில் பின்வரும் விடயங்கள் சேர்க்கப்படவேண்டும் என நாம் பரிந்துரைக்கின்றோம்.

இலங்கைப் போர்க்குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் அல்லது செர்பிய போர்க்குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற ஒரு தீர்ப்பாயத்தை நிறுவுங்கள்.

இலங்கையின் வட.கிழக்கில் தங்கள் பண்டைய தமிழ் தாயகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வைத் தீர்மானிக்க ஐ.நா. நிர்வாகத்தின் கீழ் வாக்கெடுப்பை நடத்துங்கள், ஐ.நா முன்பு 2011 ல் தெற்கு சூடான் மற்றும் 1999 ல் கிழக்கு திமோர் போன்ற பல நாடுகளில் செய்ததைப் போல சிரியா மற்றும் மியான்மரில் ஐ.நா தற்போது விசாரணை நடத்தி வருவதால், இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்தும் ஐ.நா விசாரிக்க வேண்டும்.

இந்த விசாரணைகள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றிய விபரங்களுக்கு கொண்டு செல்லும்.

அத்துடன் இங்கிலாந்தில் சனல் 4தயாரித்த ‘ஸ்ரீலங்காவின் கொலைக் களங்கள்’ என்ற ஆவணப்படம், இலங்கையில் போரில் நடந்த கொடுமைகளுக்கு மோசமான ஆதாரங்களை அம்பலப்படுத்தியது. மேலும் இந்த விசாரணைக்கு ஆரம்ப சூழலை இவ் ஆவணப்படம் வழங்க உதவும்.

இலங்கையின் வட.கிழக்கில் தமிழர்களின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இலங்கை இராணுவத்தை மாற்ற ஐ.நா அமைதி காக்கும் படை தேவை, மேலே குறிப்பிட்ட நான்கு முக்கியமான பணிகளுக்கு யு.என்.எச்.ஆர்.சி பொறுப்பேற்க வேண்டும்.

பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட அரசியல் தீர்வோடு தமிழர்கள் நீதி பெறும் வரை யு.என்.எச்.ஆர்.சி ஓய்வெடுக்கக்கூடாது. இலங்கையின் சிங்கள போர்க்குற்றவாளிகளிகள் தாம் இழைத்த குற்றத்திக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், கனடா மற்றும் ஆவுஸ்ரேலிய தூதர்களுக்கு நாங்கள் எழுதிய கடிதத்தில் மேற்கண்ட ஐந்து விடயங்களையும் எழுதினோம்.

எங்கள் போராட்டத்தின்போது காணாமல்ஆக்கப்பட்ட குழந்தைகளைத் தேடும் பெற்றோரை இழக்கிறோம் என்பது போன்ற எங்கள் சுருக்கமான துன்பங்களையும் நாங்கள் கடிதத்தில் முன்வைத்தோம்.

முடிவில், தயவுசெய்து எங்கள் நியாயமான கோரிக்கைகளை விரைவில் விரைவுபடுத்துங்கள்.  இல்லையெனில் அப்பாவி உயிர்கள் தொடர்ந்து இழக்கப்படும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நிகழும், பண்டைய தமிழ் கலாச்சாரம் அழிவை எதிர்கொள்ளும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

IMG 20210101 WA0035
IMG 20210101 WA0036
IMG 20210101 WA0037
IMG 20210101 WA0038