ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமம்- கோட்டா அரசுக்கு மைத்திரி எச்சரிக்கை!

President Maithripala Sirisena
President Maithripala Sirisena

“ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும்.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது புகைப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ். காவல்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது சிறுபிள்ளைத்தனமானது. விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவருக்கும் முதுகெலும்பு இருக்க வேண்டும். நல்லாட்சியில் எமக்கு அந்த முதுகெலும்பு இருந்தது. அதனால் விமர்சனங்களை எதிர்கொண்டோம். ஊடகங்களை முழுச்சுதந்திரத்துடன் இயங்க அனுமதித்தோம்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து சில நாட்களுக்கு மட்டும் சமூக ஊடகங்ளை முடக்கி வைத்திருந்தோம். இன ரீதியான – மத ரீதியான முறுகல் நிலையைத் தவிர்க்கும் வகையிலேயே இந்த முடக்கல் நிலையை அன்று விதித்திருந்தோம். ஜனாதிபதி என்ற வகையில் – அரசு என்ற வகையில் விமர்சனங்களுக்குப் பயந்து அன்று சமூக ஊடகங்களை நாம் முடக்கவில்லை. எனினும், அன்றைய நாட்களில் பத்திரிகைகளும், வானொலிகளும், தொலைக்காட்சிகளும் சுதந்திரமாக இயங்கின.

நான் அன்று ஜனாதிபதி. இன்று முன்னாள் ஜனாதிபதி. அன்றும் சரி – இன்றும் சரி ஊடகங்களை மதிக்கின்றேன். விமர்சனங்களை ஏற்கின்றேன்.

ஆட்சிப்பீடத்தில் இருந்த ஜனாதிபதிகளில் நான் வித்தியாசமானவன். என்னைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக சிறையிலிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்குக்கூட நான் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தேன். மூவின மக்களின் மனதையும் நான் வென்றிருந்தேன்.

அதனால் சில ஊடகங்கள் என்னை வாழ்த்தின. சில ஊடகங்கள் என்னைத் தூற்றின. ஆனால், நான் அமைதியாக வாழ்த்துதலையும், தூற்றுதலையும் ஏற்றேன்.

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் ஊடகங்கள் மீது எவரும் கைவைக்க வேண்டாம். அது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும். அந்தவகையில் ‘உதயன்’ மீதான வழக்குத் தாக்கலைக் கண்டிக்கின்றேன்” என்றுள்ளது.