வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளரின் தாக்குதலில் 3 பேர் காயம்: நடவடிக்கை எடுக்கத் காவல்துறையினர் தயக்கம்!

தாக்குதல்
தாக்குதல்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் வந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் ஒன்றிணைந்து மேற்கொண்ட தாக்குதலில் தந்தை மகன் உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எனினும் தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் இன்றுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டிவருவதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 


கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பூந்தோட்டம் பகுதியில் சிறுவன் ஒருவர் மீது மதுபோதையில் சென்ற சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இதனைத்தடுத்து நிறுத்த முற்பட்ட தந்தை மகன் உறவினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
இத்தாக்குதலில் காயமடைந்த ப.மகேஸ்வரன் வயது 54, ம. நிக்சன் 24, த. ஜனகன் வயது 29 ஆகிய மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

 
இச் சம்பவங்களுடன்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின்  அலுவலகத்தில் பணிகின்ற ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் சிலர் தொடர்புபட்டுள்ளதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

 எனினும் அவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிராக இன்று வரையில் எவ்விதமான நடவடிக்கையையும்காவல்துறையினர்மேற்கொள்ளவில்லை அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டிவருகின்றனர்.

எனவே இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளுமாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினரின் வாகனச்சாரதி தொடர்புபட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தனியார் கல்வி நிலைய உரிமையாளர் தெரிவித்தும் அவருக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.