இராணுவத்தின் பணிகளை வரையறை செய்யுங்கள் – பவித்ராவுக்கு அரச மருத்து அதிகாரிகள் சங்கம் கடிதம்

OIP 1 3
OIP 1 3

கொவிட்-19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்காக 25 மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் பணிகள் என்ன என்பது தொடர்பில் வரையறுக்குமாறு வலியுறுத்தி அரச மருத்து அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது

சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோவினால் செவ்வாயன்று இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் தொடர்பான சட்டத்தின் படி சுகாதார நெறிமுறைகளை செயற்படுத்தும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உரியதாகக் காணப்படுகிறது.

எனினும் புதிதாக இராணுவத்தினர் நியமனத்தின் தெளிவற்ற பங்குபற்றலானது, கொவிட்-19 தொடர்பான சுகாதார நெறிமுறைகளை அமுல்படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

மாவட்ட ரீதியில் கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவக்கைகளை ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு தெளிவான பணியை வழங்குதல் குறித்து இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

கொவிட்-19 கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்காக பணிகள் தொடர்பில் தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது கொவிட்-19 குறித்த சுகாதார நெறிமுறைகளை செயற்படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட்-19 என்பது உலகலாவிய தொற்று மற்றும் பொது சுகாதார அவசர நிலை என்பதை நீங்கள் அறிவீர்கள். தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி சுகாதார நெறிமுறைகளை செயற்படுத்தும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்குரியதாகும். 

 மேலும் கொவிட்-19 உலகலாவிய அனுபவத்தினடிப்படையில் பல துறையினரின் ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

இராணுவத்துறையானது மாவட்ட ரீதியிலான நிர்வாகத்திற்கும் சுகாதார நிர்வாகத்திற்கும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுதியாக நம்புகிறது.

கொவிட்-19 கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படைகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்பை நாம் வரவேற்கும் அதே வேளை, இந்த விடயம் தொடர்பான சகல நடவடிக்கைகளுக்கும் முன்னணி ஒருங்கிணைப்பாளராக சுகாதாரத்துறையே காணப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

 எனவே எம்மால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குழப்பத்தை தவிர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு தெளிவான ஒரு பணியை ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்