தண்டப்பணம் செலுத்த முடியாமல் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு விடுதலை!

download 2 14
download 2 14

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தண்டப்பணத்தை செலுத்த முடியாமல் நீண்ட  நாட்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட பொதுமன்னிப்புக்கமைய அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைசாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு மத்தியில்  சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலை குறைப்பதற்காகவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தண்டப்பணம் செலுத்த முடியாமல்  சிறைவைக்கப்பட்டுள்ள  கைதிகளை  விசேட பொது மன்னிப்பின்  பேரில் விடுதலை செய்யுமாறு, கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இவ்வாறு தண்டபணம் செலுத்த முடியாமல் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள  கைதிகளை  விடுதலை செய்வதற்கு   சிறைச்சாலைகள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.

தண்டபணம் செலுத்த முடியாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் விடுதலை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்படும் கைதிகள் அனைவருக்கும் பி.சீ.ஆர் பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் , அந்த பரிசோதனை முடிவுகளுக்கமைய வைரஸ் தொற்று ஏற்படாத 92 கைதிகள் நேற்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.  

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 12 கைதிகளும், மஹர சிறைச்சாலையிலிருந்து 9 கைதிகளும், அநுராதபுரம் மற்றும் பல்லன்சேன ஆகிய சிறைச்சாலைகளிலிருந்து தலா 6 கைதிகளும், யாழ்ப்பாணம், குருவிட்ட , நீர்கொழும்பு, தல்தென ஆகிய சிறைச்சாலைகளிலிருந்து தலா 5 கைதிகளும், பதுளை, கந்துருகஸ்ஹார, கேகாலை, வாரியபொல ஆகிய சிறைச்சாலைகளிலிருந்து தலா 4 கைதிகளும், மொனராகலை, பல்லேகெல, பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளிலிருந்து தலா 3 கைதிகளும், மெகசின், பூஷா, காலி, வவுனியா, வீரவல ஆகிய சிறைச்சாலைகளில் தலா 2 கைதிகளும், மட்டகளப்பு, களுத்துறை, அங்குணு கொலபெலஸ்ஸ மற்றும் திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளிலிருந்து தலா ஒரு கைதிகளும் உள்ளடங்களாக 92 பேர் இவ்வாறு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்படும் கைதிகள் தொடர்பில் உரிய பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய தண்டபணம்  செலுத்த முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளும் இந்த விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.