வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத வீடுகளை தனிமைப்படுத்த நடவடிக்கை முன்னெடுப்பு!

Vavuniya 18.07.2020
Vavuniya 18.07.2020

வவுனியா சாந்தசோலையில் இன்று பிற்பகல் சுகதாதர பரிசோதகர் ஒருவரினால் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளாத வீடுகளுக்கு சென்று அவ்வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள் மக்களின் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி கிராம அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர் .

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியா சாந்தசோலை வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்துவரும் வைத்தியசாலையில் பணியாற்றும் ஒருவர் மற்றும் சதொசவில் பணியாற்றும் ஒருவர் ஆகியோரின் வீடுகளுக்கு இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்ற சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் எவ்விதமான அறிகுறிகள் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளாத வீடுகளில் குறித்த வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காட்சிப்படுத்தப்படும் பதாதை ஒன்றினை காட்சிப்படுத்திவிட்டு சென்றுள்ளார்.

எனினும் அவ்வீட்டிலுள்ளவர்கள் அதனைப்பார்வையிட்டு குறித்த சுகாதாரப்பரிசோதகருடன் இவ்வீட்டில் எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்படவில்லை . எனினும் எவ்வாறு இவ்வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பதாதை காட்சிப்படுத்தப்பட முடியும் என்று தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இவ்விடயம் குறித்து கிராம அமைப்புக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு சென்ற கிராம அமைப்பினரால் தெளிவுபடுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதையடுத்து சுகாதார உத்தியோகத்தர் அங்கிருந்த பதாதைகளை அகற்றிவிட்டு ஏதோ தவறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் இவ்வாறு பொறுப்பற்றவிதமாக செயற்படும் சுகாதார உத்தியோகத்தர்கள் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டு மன உழைச்சலுக்குட்பட்டு வருவதாகவும் இவ்வாறு இடம் பெறும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்துமாறும் மேலும் தெரிவித்துள்ளனர்.