காத்தான்குடியில் 10 கிராம சேவகர் பிரிவு தொடர்ந்தும் முடக்கம்!

WhatsApp Image 2021 01 18 at 18.50.05
WhatsApp Image 2021 01 18 at 18.50.05

தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேசத்தில் 8 கிராம சேவகர் பிரிவை விடுவிக்கவுள்ளதாகவும் 10 கிராமசேவகர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும். அதேவேளை கிழக்கில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் இன்று திங்கட்கிழமை (18) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு கடந்த 31ம் திகதி முதல் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினர் அன்டிஜன் மற்றும் பி சி ஆர் பரிசோதனையின் அடிப்படையிலும் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று இடம்பெற்ற மாவட்ட செயலணி கூட்டத்தில் காத்தான்குடியில் உள்ள 18 கிராமசேவகர் பிரிவில் 10 பிரிவை தொடர்ச்சியாக தனிமைப்படுத்தவேண்டும் என நாங்கள் பரிந்துரை விடுத்துள்ளோம்.

இதனடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிற்பாடு இந்த 10 கிராமசேவகர் பிரிவுகளையும் எவ்வாறு தொடர்ச்சியாக அமுல்படுத்திக் கொண்டு செல்வது தொடர்பாக ஆராய்வதற்கான இராணுவம் காவல்துறைசுகாதார பகுதியினருடன் இந்த பகுதிகளுக்கு விஜயம் செய்து எந்த வீதி , மற்றும் பகுதி என எல்லையை தீர்மானிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம் சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு 10 பிரிவுகளை தனிமைப்படுத்துவது தொடர்பாக சிபார்சுகளை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம் அதற்கான உரிய பதில் ஒரு இரு தினங்களில் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக மிகுதியான பகுதியை விடுவிக்கப்படும்.

அதேநேரம் அந்த பகுதியில் இருக்கின்ற அபாயங்கள் நீங்கவில்லை எனவே சில கட்டுப்பாடுகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக 8 கிராம சேவகர் பிரிவு தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளையும் பொறிமுறைகளையும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் இனைந்து அதனை தீர்மானிப்பார்கள்.

தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கின்ற ஏனைய 10 கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள மக்களின் நடவடிக்கைகளைப் பொறுத்துதான் இந்த பகுதி எவ்வளவு காலத்திற்கு தொடர்ச்சியாக தனிமைப்படுத்துவதா? இல்லையா? என்பதுடன். அங்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற பி சி ஆர் மற்றும் அன்டீஜன் பரிசோதனையின் முடிவுகளின் பிரகாரம் நாங்கள் கட்டம் கட்டமாக மேலும் தளர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானித்துள்ளோம்.

அதேவேளை கிழக்கில் கடந்த 12 மணித்தியாலங்களில் 15 பேர் புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர் கிண்ணியா பிரதேசத்தில் 4 பேரும். கல்முனை வடக்கு பகுதியில் 4 பேரும், காரைதீவு பிரதேசத்தில் ஒருவருக்கும், ஓட்டுமாவடியில் 3 பேருக்கும். மட்டக்களப்பில் 3 பேர் உட்பட 15 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதையடுத்து கிழக்கில் 1948 பேர்கள் ஆக அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் கிண்ணியா, திருகோணமலை, கல்முனைதெற்கு. உப்புவெளி, காத்தான்குடி, மட்டக்களப்பு, காரைதீவு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் தொடர்ச்சியாக சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

தொடர்ந்தும் 730 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றதுடன் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் தொற்றின் தாக்கம் பல பகுதிகளில் எங்களால் கண்டிபிடிக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம் பெற்றுவருகின்றதுடன் மக்களுடைய ஒத்துழைப்பு நாங்கள் எதிர்பார்க்கப்பட்டளவு போதியதாக இல்லை மக்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்திலே கிழக்கில் தொற்றினை இல்லாமல் செய்யமுடியும் என்றார்.