சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரம்

swiss
swiss

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளுர் பெண் ஊழியர் திங்களன்று கடத்தப்பட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தகவல் தெரித்துள்ளன.

சுவிசர்லாந்து ஊடக அறிக்கை-

தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார், அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை தருமாறு அச்சுறுத்தப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 24ம் திகதியன்று சுவிஸ் தூதரக ஊழியரை கடத்திய கடத்தல்காரர்கள், குற்றப்புலனாய்வு துறை அதிகாரி நிஷாந்த டி சில்வா சுவிசர்லாந்திற்குள் நுழைய விசா வழங்கியது தொடர்பில் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

உயர்மட்ட துப்பறியும் அதிகாரியான நிஷாந்த டி சில்வா புதிய அரசாங்கம் பதவியேற்றதனையடுத்து உரிய அங்கீகாரமின்றி நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மற்றவர்களும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க 704 குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் பட்டியலை சுவிஸ் குடிவரவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தூதரக பெண் அதிகாரி கடத்தல் தொடர்பாக உரிய விசாரணை – பிரதமர்

சுவிசர்லாந்து தூதரகத்தில் பெண் அதிகாரி கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் இதுவரையில் கிடைக்கவில்லை இருப்பினும் விசாரணை நடைபெறுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரியின் ஒத்துழைப்பும் அவசியமாகும். இந்தப் பெண் அதிகாரியின் ஒத்துழைப்பின்றி விசாரணையை முன்னெடுப்பது சிரமமானதாகும். சி.சி.ரிவி கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சிகளும் கவனத்திற்கொள்ளப்பட இருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் பற்றி கவனம் செலுத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அதனை தாம் கண்டிப்பதாகவும் பிரதமர் என்று கூறினார்.

கடத்தப்பட்டமைக்கான காரணிகளைக் கூற முடியாது- இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

இந்நிலையில் இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பாக எதுவுமே கூற முடியாதென புதிதாக பதவியேற்றுள்ள சர்வதேச ஒத்துழைப்புக்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பாக அரசாங்கத்திற்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் ஆனாலும் கடத்தப்பட்டமைக்கான காரணிகளைக் கூற முடியாதென்றும் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். எனினும் கடத்தப்பட்டமை தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் சுவிசர்லாந்து தூதுவருக்கிடையிலான சந்திப்பு

அதேவேளை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கொழும்பில் உள்ள சுவிசர்லாந்து தூதுவரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள சுவிசர்லாந்துத் தூதுவருக்கு உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு துறையினரும், பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.

கடத்தப்பட்டமைக்கான ஊகம்-

கொழும்பு தெகிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் இருந்து ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை நிசாந்த டி சில்வா நடத்தி வந்தார்.

இலங்கைக் கடற்படையின் முன்னாள் தனபதி வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுமிருந்தனர். வசந்த கரண்ணாகொட இந்த வழக்கில் பிரதான எதிரியாகவும் இனம் காணப்பட்டிருந்தார்.

அத்துடன் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல், த நேஷன் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்தமை,

ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பான பல்வேறு விசாரணைகளையும் நிசாந்த டி சில்வா மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையிலேயே கொழும்பில் சுவிசர்லாந்து நாட்டின் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.