இரணைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

rupavathy
rupavathy

இரணைதீவு கடற்றொழிலாளர்கள், அவர்களது தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து தொழில் செய்யமுடியும் என கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி- இரணைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (19) காலை கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரூபவதி கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,  “இரணைதீவு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இரணைதீவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம்.

குறிப்பாக பாடசாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் கடல் போக்குவரத்து தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளோம்.

இதேவேளை  இரணைதீவு கடற்றொழிலார்கள், தங்களுடைய தேசிய அடையாள அட்டைகளை காண்பிக்கும் பட்சத்தில் அவர்கள் தொழில் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.