அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதில்லை என யாழ் மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தெரிவிப்பு!

20210122 102725
20210122 102725

வங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யாழ். மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்றையதினம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது யாழ். மாவட்டத்தின் விவசாயத் துறை சம்பந்தமான பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

அண்மையில் பெய்த அடை மழையால் நெல் அறுவடைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளமை, மற்றும் நெல் வயல்கள் அழிவடைந்ததன் காரணமாக நெல் கொள்வனவு விலையை தேசிய மட்டத்தில் உள்ளதைப் போன்று அல்லது வடக்குக்கு ஏற்றது போன்று மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் வங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த விடயங்கள் தொடர்பில் விவசாய அமைப்புக்கள் மட்டத்தில் பிரதேச செயலாளர்கள் மூலம் வங்கிக்கடன் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் விதை உற்பத்தி நிலையத்துக்கென யாழ். மாவட்டத்தில் தகுந்த இடம் ஒன்றைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி விதை உற்பத்தி நிலையத்துக்குச் சென்று விவசாயிகள் தமது விதை பொருள்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுவதனால் மாவட்டத்தில் ஒரு இடத்தில் விதை உற்பத்தி நிலையத்தை அமைத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பிறிதொரு இடத்தை பெற்றுக் கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட விவசாயப் பணிப்பாளர், கமநல சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலர்கள், விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள், நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயத்துறை சார் திணைக்களத் தலைவர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.