யாழ்.பல்கலை துணைவேந்தர் தெரிவில் புதிய சிக்கல்!!

Jaffna
Jaffna

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை எதிர்வரும் டிசெம்பர் 28 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக அது தள்ளிப்போகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கடந்த ஒக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஒன்பது பேர் அதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அதற்கான தேர்தலை நடாத்துவதில் தடங்கல் ஏற்பட்டிருந்தன.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், நேற்று முன்தினம் சனிக்கிழமை கூடிய யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவை விண்ணப்பதாரிகளின் தகுதி, தராதரங்களை மதிப்பீடு செய்வதற்கும், துணைவேந்தர் தேர்தலை நடாத்துவதற்கான திகதியைத் தீர்மானிப்பதற்காகவும் மூவரடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தது. அந்த குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவள்ள அதே வேளையில் எதிர்வரும் டிசெம்பர் 28 ஆம் திகதி துணைவேந்தர் தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதனால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அநேகமாக எதிர்வரும் டிசெம்பர் 18 ஆம் திகதியளவில் இந்ந நியமனங்கள் வழங்கப்படலாமெனவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களின் பேரவைகளும் கலைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படலாமெனவும் விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

இந்நிலையில், கலைக்கப்படும் பேரவையினால் நடாத்தப்படும் துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் சட்ட வலுவுடையதாக இருக்குமா? என்ற புதிய சிக்கல் தோன்றியிருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர்.

இதே வேளை, அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு தவிசாளர்களையும், உறுப்பினர்களையும் நியமிப்பதற்கென ஜனாதிபதியினால் அமைக்கப்படட்டுள்ள நிபுணர்கள் குழுவிடம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், வாழ் நாள் பேராசிரியருமான ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அறியவருகிறது.