மட்டக்களப்பில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

01 16 1
01 16 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் கோறளைப்பற்று மத்தி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் சில வீதிகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் பெரும்பாலான தாழ் நில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு காணப்படுவதுடன், சில இடங்களில் குடியிருப்புக்குள் நீர் புகுந்துள்ளமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, பிரதேசமும், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கறுவாக்கேணி, கிண்ணையடி, ஆஞ்சநேயர்புரம், கண்ணகிபுரம், ஆகிய பிரதேங்களில் வெள்ள நீர் காணப்படுவதுடன், இதுவரை எந்தவித இடம்பெயர்வுகளும் இடம்பெறவில்லை என்றும், தற்போது மழை தொடர்ச்சியாக பெய்யும் நிலைமை ஏற்படும் பட்சத்தில் இடம்பெயர்வுகள் இடம்பெறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவித்தார்கள்.

குறித்த மழை காரணமாக வீதிகளில் ஏற்பட்ட வெள்ள காரணமாக போக்குவரத்துக்கள் செய்வதிலும் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்வதில் பாரிய இன்னல்களை அனுபவித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.