இணையவழியில் இரண்டு நாடகங்களை நாளை காணலாம்

Copy of Invest in your future Webinar event Made with PosterMyWall 1
Copy of Invest in your future Webinar event Made with PosterMyWall 1

தற்போதைய கொவிட் 19 முடக்கநிலையுள்ள சூழலில் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் நாடகத்துறையும் ஒன்று மனிதர்கள் ஒன்று கூடுவதால் சாத்தியப்படுவது தான் நாடகம். இப்போது மனிதர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல் காணப்படுகின்றது. இதனால் அண்மைக்காலமாக நாடக ஆற்றுகைகளுக்கு சாத்தியம் இல்லை என்ற நிலையே நீடிக்கிறது.

IMG 1398

இந்தச்சூழலில் மெய்நிகர் அரங்க வெளியில் (Online Theatre Space ) நாடகங்களை மேடையேற்றும் முயற்சியை செயல் திறன் அரங்க இயக்கம் (Active Theatre Movement) இந்த ஆண்டு தை 15 திகதியிலிருந்து ஆரம்பித்திருந்தது. இது ஈழத்தின் நாடக முயற்சிகளில் புதிய திருப்பமாக அமைந்துள்ளதோடு, ஈழத்து நாடக மேடையேற்றங்களின் முதல் முறையான அரங்காற்றுகையாகவும் பதிவாகியிருக்கிறது.

இந்த மெய்நிகர் நாடக வெளியை உருவாக்குவதற்கு சூம் செயலியின் வசதிகள் பயன்படுத்தப்பட்டன. இதில் ‘வண்டியும் தொந்தியும்’ என்ற நாடகம் முதல்முறையாக ஆற்றுகை செய்யப்பட்டது. இது இரண்டு தடவைகள் அரங்கேறியிருக்கின்றது. இரண்டு நடிகர்கள் மட்டும் பங்கு கொண்டிருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக எதிர் வரும் தை 30, 31 திகதிகளில் மேலும் இரண்டு நாடகங்கள் சூம் செயலிவழி அரங்கேறுகின்றன.

IMG 2613

இதில் இரண்டு வகையான நாடகங்கள் மேடையேறுகின்றன. ‘ஏகாந்தம்’ என்ற வேடமுக நாடகம். முழு வேடமுகத்தைப்பயன்படுத்தி இதில் நடிக்கிறார்கள். தமது பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு சென்று விட இங்கு தனித்திருக்கும் முதியவர்களின் வாழ்வியல் பற்றி இந்த நாடகம் பேசுகிறது. இது அற்புதமான காட்சிப்பெறுமானங்கள் உடைய நாடகமாகும். இது சூம் செயலிவழி புதிய அனுபவத்தைக் கொடுக்குமென்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதே போன்று ஓராள் அரங்காக ‘மரணச்சான்றிதழ் என்ற நாடகம் அரங்கேறவிருக்கிறது. இது காணாமற்போன குடும்பத்தின் பெண்னொருவரின் கதையாக காட்சியாகிறது. இரண்டு வகையான நாடகங்களையும் தேவநாயகம் தேவானந்த் எழுதி நெறிப்படுத்தியுள்ளார். தை மாதத்தின இறுதி நாட்களில் மேடையேறும் இந்த இரண்டு நாடகங்களையும் உலகெங்குமிருந்து பார்வையிட முடியும். இந்த நிகழ்வை இந்திய மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்கள் நெறிப்படுத்துகிறார்.  இதனை இலவசமாக மாலை 7.00 மணிக்குப் பார்வையிட முடியும். இதனைப்பார்ப்பதற்கான சூம் ஐ.டி: 266 687 3933 மற்றும் கடவுச்சொல் : ATM