அவதூறாக வெளியிடப்பட்ட செய்தியில் உண்மைத்தன்மையில்லை; கண்டிக்கின்றார் கரைதுறைப்பற்று ப.நோ.கூ. சங்கத் தலைவர்!

FB IMG 1611822934458
FB IMG 1611822934458

கடந்த 21.01.2021 வியாழன் அன்று முல்லைத்தீவு – குமுழமுனையில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குரிய அரிசி ஆலையின் திருத்த வேலைக்காக உழவியந்திரத்தில் மண் ஏற்றிவரப்பட்டபோது காவல்துறையினர் கைதுசெய்து நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந் நிலையில் இத்தகவலைத் திரிவுபடுத்தி, கரைதுறைப்பற்று பலநோக்குகூட்டுறவுச் சங்கத் தலைவர் தொடர்பில் அவதூறான செய்தி ஒன்று இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைத் தன்மை அற்றதெனவும், தன்மீதுள்ள காழ்ப்புணர்ச்சிகாரணமாக சிலர் தகவல்களைத் திரிவுபடுத்தி தன்மீது வேண்டுமெனறே அவதூறு பரப்பியுள்ளதாகவும், எனவே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள செய்தியை வன்மையாகக் கண்டிப்பதாக கரைதுறைப்பற்று பலநோக்குகூட்டுறவுச் சங்கத் தலைவர் இ.மயூரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த வியாழக்கிழமை குமுழமுனையில் இருக்கின்ற பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தின் அரிசி ஆலைத் திருத்த வேலைக்காக ஏற்றிவரப்பட்ட மண்ணை, காவல்துறையினர் இடைமறித்து பிடித்துச்சென்று முல்லைத்தீவு நீதிமன்றிலே வழக்குத் தொடுத்திருந்தனர்.

இத் தகவலைத் திரிவுபடுத்தி, “குமுழமுனையைச் சேர்ந்த பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தமது அரசி ஆலைக்கு மண்ணினை ஏற்றி கொண்டுசென்றபோது, கரைதுறைப்பற்று பலநோக்குக்கூட்டுறவுச்சங்க உழவியந்திரம் பிடிபட்டுள்ளதாகவும், தலைவர் இலஞ்சம் வழங்க முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு காவல்துறையில் அடைக்கப்பட்டிருப்பதாக” இணையத்தளமொன்றில் செய்தி வெளிடப்பட்டிருக்கின்றது.

எமக்கும் செய்தி வெளியிட்ட ஊடகத்திற்கும் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை.

ஜனநாயகரீதியாக அவர்கள் தமது கடமைகளை ஆற்றுவதற்கு, நாமும் எப்போதும் அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருப்போம்.

அவ்வாறு செய்தியை வெளியிட்டுள்ள ஊடக நிறுவனம் தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அச் செய்தியை வெளியிட்டிருக்கலாம்.

அதேவேளை பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர்களாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், கூட்டுறவு ஆணையாளர் ஆகியோர் இருக்கின்றார்கள். செய்தி வெளியிட்ட அந்த ஊடக நிறுவனம் அவர்களிடம் வினாவியிருக்கலாம்.

பொதுமுகாமையாளர் இருக்கின்றார், நெறியாளர்கள் இருக்கின்றார்கள், அவர்களிடமும் இத்தகவல் தொடர்பில் வினாவி உண்மைத் தன்மைகளை அறிந்திருக்கலாம்.

மேலும் இச்சங்கத்திலே ஏற்கனவே நான் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பின்னர், என்னால் தலைவராக நியமிக்கப்பட்ட ஒருவர் கட்சி அரசியல் நடாத்தும் போக்கிலும், தனது சொந்த சொத்துப்போலவும் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினை வழிநடாத்த முற்பட்டிருந்தார்.

இந்நினையில் மீண்டும் இடம்பெற்ற தேர்தலில் கூட்டுறவாளர்கள் எனக்கு அமோக ஆதரவளித்து, இச் சங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக என்னைத் தலைவராக இரண்டாவது தடவையும் தேர்வுசெய்திருந்தனர்.

அந்தக் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலேதான் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

என்னை காவல்துறையினர் எவருமே கைதுசெய்வுமில்லை, எந்தவிதமான பிணையிலோ, நிபந்தனைகளிலோ விடுதலை செய்யப்படவுமில்லை.

என்னை காவல்துறை நிலையத்திற்கு யாரும் அழைத்துச்செல்லவுமில்லை.

பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தின் அரிசி ஆலைத் திருத்தவேலைக்கே மண் ஏற்றப்பட்டிருந்தது.

அத்தோடு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் பொதுமுகாமையாளர், பணியாளர்கள், இயக்குனர்சபை உறுப்பினர்கள், அரிசி ஆலை உபசபையின் உறுப்பினர்கள், பலநோக்குகூட்டுறவுச் சங்க தலைவர் என்ற வகையில் நானுமாக கிட்டத்தட்ட 25பேருக்கும் மேற்பட்டவர்களுடைய பிரசன்னத்திலேதான் அந்த அரிசி ஆலையினுடைய சீரமைப்பு வேலைகள் இடம்பெற்றிருந்தன.

ஆகவே இந்த விடயத்தின் உண்மைத்தன்மையினை சகலருமே அறிவார்கள்.

இந் நிலையில் இச்சம்பவத்தினைத் தவறாகத் திரிவுபடுத்தி வெளியிடப்பட்ட செய்தியை வன்மையாகக் கண்டிப்பதுடன், இச் செய்தியில் உண்மைத் தன்மை இல்லை என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கின்றோம் – என்றார்.