சட்டவிரோதமாக விடுவிக்கப்பட் பகுதியை தேசிய கொரோனா செயலணியின் முடிவு வரும் வரை உடன் மூடுமாறு மாவட்ட செயலணி தீர்மானம்!

IMG a350784f65c012c661eade14ad3addcb V 1
IMG a350784f65c012c661eade14ad3addcb V 1

மட்டக்களப்பு காத்தான்குடியில் முடக்கப்பட்டிருந்த 10 கிராமசேவகர் பிரிவு இன்று (31) சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பிரிவில் 7 பிரிவையும் தேசிய கொரோனா செயலணியில் இருந்து அறிவித்தல் வரும் வரை உடனடியாக மூடுவதாக இன்று மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணில் தீர்மானிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு கடந்த டிசம்பர் 31ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது பின்னர் 7 கிராமசேவகர் பிரிவு விடுவிக்கப்பட்டு தொடர்ந்து 10 கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் காத்தான்குடி நகரசபை தவிசாளர் தன்னிச்சையாக தீர்மானித்து கொரோனா சட்டத்திற்கு முரணாக 7 கிராமசேவகர் பிரிவை இன்று ஞாயிற்றுக்கிழமை (31) விடுவிப்பதாக அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து எற்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் குறித்த பகுதிக்கு மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட உதவி காவல்துறை மா அதிபர் , இராணுவத்தினர் சுகாதார அதிகாரிகள், நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அவசரமாக மாவட்ட செயலகத்தில் கூட்டப்பட்டு ஆராயப்பட்டது.

இதில் எந்த பகுதியை தனிமைபடுத்துவது அல்லது விடுவிப்பது தொடர்பாக மாவட்ட செயலணிக்குழு கொரோனா தேசிய செயலணிக்கு பரிந்துரைக்க முடியும் அதற்கான முடிவின் பிரகாரம் நாங்கள் அதனை அமுல்படுத்தமுடியும் இருந்தபோதும் தன்னிச்சையாக எவரும் முடிவு எடுக்கமுடியாது.

எனவே தன்னிச்சையாக விடுவிக்கப்பட்ட 7 கிராமசேவகர் பிரிவும் கொரோனா தேசிய செயலணியில் இருந்து அறிவித்தல் வரும் வரை உடனடியாக முடக்கப்படும் என மாவட்ட செயலணியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா சட்ட விதிமுறைகளுக்கு எதிராக விடுவிக்கப்பட்ட காத்தான்குடி 7 கிராம சேவகர் பிரிவும் உடனடியாக முடக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ. லதாகரன் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் காத்தான்குடி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி நகரசபை தவிசாளர் கையொப்பம்மிட்டு முடக்கப்பட்ட 7 கிராம சேவகர் பிரிவுகளை தான் விடுவிப்பதாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது நகைப்புக்குரிய விடயம் கொரோனா சட்டத்தின் கீழ் சுகாதார நாயகத்துக்கு மட்டும் அதிகாரம் கொண்டது அவருக்குரிய அந்த அதிகாரத்தின் கீழ் அவரின் கீழ் உள்ள எவரும் அந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.

கொரோனா சட்டத்தின் கடைசி முடிவானது தேசிய சுகாதார நாயகத்தினால் மாத்திரமே வழங்கப்படமுடியும். எங்களுக்கு கூட அந்த அதிகாரம் இல்லை நாங்கள் அவருக்கு எங்களுடைய சிபாரிசை வழங்குவோம். அது தொடர்பாக அவர் எங்களுடன் தொடர்பு கொண்டு பின்னர் அவர் தன்னுடைய அறிவித்தலை தேசிய கொரோனா செயலணிக்கு அனுப்பிவைப்பார் அதன் பின்னர் அவர்கள் அதனை அறிப்பார்கள் இது தான் வழிமுறை.

ஆகவே இந்த கடிதம் சட்டத்துக்கு முரணானது இருந்தபோதும் ஒரு பகுதியை நாங்கள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால் அதனுடைய பாதிப்பு மக்களுக்கு எனவே எங்களுக்கும் விருப்பம் மிகவிரைவில் ஒருபகுதியை விடுவிக்கவேண்டும் என்று அதனை விடுவிப்பதற்கான உரிய ஆதாரத்தை உரிய வகையில் சமர்ப்பிக்கப்படவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம். என்ற அடிப்படையில் நாங்கள் செயற்பட்டு இன்னும் நான்கு நாட்களில் தீர்மானம் எடுப்போம் .

இந்த பகுதிக்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடந்த 3 தினங்கள் சென்று பரிசோதனையில் ஈடுபட்டதுடன். சுமார் 70 ஆயிரம் சனத்தொகை கொண்ட பிரதேசத்தில் நாங்கள் எதிர்பார்த்தது குறைந்தது ஒரு நாளிற்கு 150 பேருக்கு பரிசோதனை செய்யப்படும் என ஆனால் ஒரு நாளில் 50 அல்லது 60 க்குமேல் அன்டிஜன் பிரிசோதனைகள் இடம்பெறவில்லை.

சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது இந்த பிரதேசத்தில் கடந்த வாரம் 8 கிராமசேவகர் பிரிவு விடுவித்துள்ளோம். இதன் தாக்கம் முற்று முழுதாக நீங்கவில்லை அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பது தான் எங்களது முக்கியமான குறிக்கோள். அதனடிப்படையில் நாங்கள் சுகாதார நாயகத்துடன் கலந்துரையாடி வரும் 3 நாட்கள் விசேடமாக இரு அணிகளை அனுப்பி அங்கு மொத்தமாக 800 க்கு மேற்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் வருகின்ற முடிவுகளின் பிரகாரம். தான் நாங்கள் உண்மையான நிலமையைக் காணமுடியும்.

அதன் பின்னர் தான் அந்த பகுதிகளை விடுவிப்பதா அல்லது தொற்று காணப்படும் பகுதியை மட்டும் விட்டு மற்றப் பகுதியை விடுவிப்பதா என நான்கு நாட்களில் முடிவு எடுக்கப்படும். எங்களுடைய சேவையானது ஒரே நாடு என்ற வகையில் எல்லோருக்கும் சமனான சேவைகளை செய்ய வேண்டும் அதேவேளை மூத்த பிரைஜைகளை பாதுகாக்க வேண்டும் என்று செயற்படுகின்றோம் என்றார்.