இஸ்லாமிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த கோரிக்கை!!

pakistan
pakistan

பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது பாகிஸ்தான் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்,

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

இலங்கையுடன் நெருங்கிய நட்புறவை பேணிவரும் தமது நாடு, பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய விடயங்களில் இலங்கையுடனான தொடர்பினை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்ததுடன், வெகுவிரைவில் தமது நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

பொருளாதார உதவிகளுக்கு அப்பாற்பட்டு இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக, முதலீட்டு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டதுடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான வெற்றிலை ஏற்றுமதியினை இதன்போது நினைவுப்படுத்தினார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்ததுடன், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் தமக்கு உதவியளிக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.