வர்த்தமானி அறிவிப்புகள் எமது போராட்டத்திற்கு தடையாகாது – துறைமுக ஊழியர் சங்கம்

adf0061e df3d43e0 harbour 850x460 acf cropped
adf0061e df3d43e0 harbour 850x460 acf cropped

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு  முனையத்தை பாதுகாக்க  துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தை நாளை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ளது.

பேச்சு வார்த்தையின் பின்னரே பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

துறைமுக சேவையை அத்தியவசிய சேவையாக வெளியிட்டுள்ள வர்த்தமானி தொழிற்சங்கத்தினரின் போராட்டத்திற்கு தடையல்ல என துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிஷாந்த கொரகாஹேன்ன தெரிவித்தார்.

துறைமுக ஊழியர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் கடந்த  மாதத்தின் முதல் வாரத்தில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்தோம்.

ஜனாதிபதியுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. கிழக்கு முனையத்தின் 49 சதவீத உரிமத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஜனாதிபதி உறுதியாக குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் நோக்கில் துறைமுக ஊழியர்கள் கிழக்கு முனைய பாதுகாப்பு மையம் என்ற அமைப்பினை உருவாக்கினார்கள்.

இந்த அமைப்பின் தேசிய சபை கூட்டம் கடந்த மாதம் 26ஆம் கூடி  கடந்த 29 வெள்ளிக்கிழமை தொடக்கம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தை நாளை முதல் தேசிய போராட்டமாக முன்னெடுக்க தீர்மானித்தோம்.

இந் நிலையில் இவ்விடயம் குறித்து கலந்தாலோசிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். பிரதமருடனான பேச்சுவார்த்தை சாதகமான அமையும் என எதிர்பார்க்கிறோம்.

பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் தீர்மானத்தின் பின்னரே தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் துறைமுக ஊழியரகள் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் எமது கோரிக்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது.

எமது தொழிற்சங்க போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து திருகோணமலை துறைமுக ஊழியர் சங்கத்தினர்  தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

இதற்கமைய இன்று திங்கட்கிழமை பகலுணவு இடைவேளையின் போது திருகோணமலை துறைமுகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.

துறைமுக சேவையினை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வெளியிட்டுள்ள வர்த்தமானியினால் எமது தொழிற்சங்க போராட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கடந்த வருடத்தின் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டது. அவ்வர்த்தமானியே  புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந் நாட்டவர்களுக்கும் விற்கவும், குத்தகை அடிப்படையில் வழங்கவும் தீர்மானிக்கப்படவில்லை.

தேசிய வளங்களை விற்கும் கொள்கை எமக்கு கிடையாது. தேசிய வளங்களை பிற நாட்டவருக்கு விற்கும் கொள்கையினை ஐக்கிய தேசிய கட்சி கொண்டிருந்தது.சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் தேசிய வளங்களை பாதுகாப்பது குறித்து அதிக அக்கறை கொள்ளப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தங்காலையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.