கிழக்கு முனையத்தால் அரசுக்குள் வெடிப்பு கோட்டாவும் மஹிந்தவும் முரணான கருத்து – சஜித் அணி சுட்டிக்காட்டு

83a744e6 262877 550x300 crop
83a744e6 262877 550x300 crop

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஒருவருக்கொருவர் முரணான கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவ்விடயத்தில் அரசுக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதும் வெளிநாட்டுக்கொள்கைகள் தொடர்பில் அவர்களுக்குப் போதிய தெளிவில்லை என்பதும் இதனூடாக வெளிப்பட்டுள்ளது.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

நாட்டின் தேசிய சொத்துக்களையும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் வெளிநாடுகளுக்கு வழங்கமாட்டோம் என்று ராஜபக்ச தரப்பினர் தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளித்தார்கள். அது மாத்திரமன்றி எமது அரசுடன் எவ்வித முதலீட்டு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும், தாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவை இரத்துச்செய்யப்படும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

எனினும் ராஜபக்ச தரப்பினர் ஆட்சிப்பீடமேறிய பின்னர், ஏற்கனவே கூறிய விடயங்களுக்கு முரணாகவே செயற்பட்டு வருகின்றார்கள். அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது என்று கூறுகின்றார்கள். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதாகக் கூறுகின்றார்கள்.

ஆனால், தற்போது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களையே வெளியிடுகின்றார்கள்.

இதிலிருந்து நாட்டின் பொருளாதார நிர்வாகம் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆகியவை தொடர்பில் அரசுக்குப் போதிய தெளிவில்லை என்பதும் இந்த விடயத்தில் அவர்கள் பிளவுபட்டிருப்பதும் வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு முரணான கருத்துக்களை வெளியிடுவதன் ஊடாக நாட்டு மக்களையும் ஏமாற்றுவதற்கு அரசு முற்படுகின்றது – என்றார்.