விமல் வீரவன்சவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது- ஜானக வக்கும்புர

Janaka.Wakkumbura
Janaka.Wakkumbura

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்சவை சிறைக்கு அனுப்ப முயன்றவர்கள் உட்பட , கடந்த காலத்தில் அவரது குடும்ப பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியவர்கள் தற்போது அவரை காப்பாற்ற முற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஒற்றுமையாகவே செயற்படுவதாகவும், தம்மை காப்பாற்ற எதிர்க்கட்சி தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த காலத்தில் தமது நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்படும் அபாயம் காணப்பட்ட போதிலும், விமல் வீரவன்ச உள்ளிட்ட பலர் மஹிந்த ராஜபக்ஸவுடன் சுதந்திரக் கட்சியை விட்டுவெளியேறியதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஆகவே, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஒருபோதும் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கட்சிகள் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.