கல்வித்துறையின் கட்டமைப்புக்களில் உடனடி மாற்றம்

gota 1
gota 1

தனது கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேவை கருதி சர்வதேச மட்டத்தில் பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள முறைபற்றி கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கல்வித்துறை குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அரசியலில் இருந்து விலகி கல்வியியலாளர்களினால் அவை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தற்போது இலங்கையில் கடைப்பிடிக்கப்படுகின்ற கல்வி முறையினை மாற்றியமைது தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட உலக பொருளாதாரத்தினை மையப்படுத்திய கல்வி தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

2019ஆம் ஆண்டிலிருந்து உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி குறுகிய காலத்திற்குள் பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் 2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளை கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அழிவுக்குள்ளாக இடமளிக்காது கூடிய விரைவில் தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் இணைத்து தேசிய வளமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உட்பட அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பல்கலைக்கழங்களை ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கலைத்துறையில் கல்விகற்று வருகின்றவர்களை குறுகிய காலத்தில் தகவல் தொழிநுட்ப அறிவுடன் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைத்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை நாட்டுக்குள்ளேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும்.

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பாடசாலைகளில் இருக்க வேண்டிய ஆசிரியர்களின் தொகையை வெற்றிடங்கள் ஏற்படாத வகையில் பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

கல்வித்துறைக்காக ஒரு வருடக் காலப் பகுதியில் தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டுமென்று இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் இடம்பெற்ற விடயங்களாவன

  • உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான உடனேயே பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கான முறைமை ஒன்றை வகுத்தல்.
  • வெற்றிடங்கள் உள்ள நிறுவனங்களை கண்டறிந்து வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் அவ்வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல்.
  • நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்றவகையில் தொழிற்படை ஒன்றை உருவாக்குதல் மற்றும் அதற்கு உதவும் பாடத்திட்டத்தை தயாரித்தல்.
  • உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.
  • தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு முன்னுரிமையளித்தல்.