ஒரு தேசம் இரு அரசு- தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முற்றுப்புள்ளி

uk foreign affaire
uk foreign affaire

டிசம்பர் 12ம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பழமைவாதக் கட்சியின் (கன்சர்வேட்டிவ் கட்சி) தேர்தல் விஞ்ஞாபனத்தில்

“முற்காலத்தில் போர் வலயங்களாகவிருந்த சைப்பிரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் இரு அரசாங்கங்களைக் கொண்ட ஒரு தீர்விற்கான எமது ஆதரவை தொடர்ந்து கடைப்பிடிப்போம்”

என தெரிவிக்கப்பட்டிருந்தமை
பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

இலங்கை தொடர்பில் பழமைவாதக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் கலந்தாலோசித்த பின்னர் தனது பலமான கண்டனத்தை உடனடியாக பழமைவாதக்கட்சியின் துணைத்தலைவர் கௌரவ ஜேம்ஸ் கிளவலி அவர்களுக்குத் தெரிவித்திருந்தார்.

உயர்ஸ்தானிகர் பழமைவாதக் கட்சியின் உயர்நிலைசார் தலைவர்களுடன் கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் தொடர்புகொண்டதன் பின்னர், அக்கட்சியின் உப தலைவர் போல் ஸ்கலி அவர்கள், 27 நவம்பர் 2019 அன்று அனுப்பிய மின்னஞ்சல் மூலமாக பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்:

“இலங்கை பற்றிய எமது கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை, மிகத்தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், இரு அரசாங்கம் பற்றிய குறிப்பானது, எமது கொள்கையின்படி மத்திய கிழக்கின் இஸ்ரேல் – பலஸ்தீனிய தீர்விற்கானது மட்டுமே தவிர இலங்கை மற்றும் சைப்பிரஸ் நாடுகளைப் பொறுத்தவரையில், பிரிவுபட்ட சமூகங்களுக்கிடையிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக தொடர்ந்துவரும் முயற்சிகளுக்கு மட்டும் நாம் ஆதரவளிப்போம்”.

இதனை மீண்டும் உறுதி செய்கின்ற வகையில் கடந்த டிசம்பர் 3ம் திகதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,

“இலங்கையில் ஆட்சியை உருவாக்குவது தொடர்பாக பழமைவாதக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இரு அரசாங்கங்கள் பற்றிய குறிப்பு மத்திய கிழக்குக்கு மட்டுமே பொருத்தமானது” என தெரிவித்திருந்தார்.

மேற்படி கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் பழமைவாதக்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளன என்பதையும் விஞ்ஞாபனத்திலுள்ள நெறிபிறழ்வானது சரியாகத் திருத்தப்பட வேண்டியது தொடர்பில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எடுத்த நடவடிக்கை பற்றியும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.