சிங்கள இனவாதிகளின் நிகழ்ச்சி நிரல் தொடரும்- ஐ.சு.மு யின் செயலாளர வ. கமலதாஸ்!

IMG20210218135556
IMG20210218135556

எந்த அரசாக இருந்தாலும் சிங்கள இனவாதிகளின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலிற்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை செயற்படுத்துபவர்களாகவே இருப்பார்கள் என கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் செயலாளர வ. கமலதாஸ் தெரிவித்தார்.

கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (18) இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வடமாகாண கிளையின் சந்திப்பு இன்று இடம்பெற்றது. தமிழ் மக்களின் வாழ்க்கைதரம், பொருளாதாரம், போன்றவை தொடர்பாக அக்கறைகொள்ள வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

கடந்த தேர்தலில் மொட்டுச்சின்னத்திற்கு 42 ஆயிரம் வாக்குகளை திரட்டிக்கொடுத்த உறுப்பினர்கள் இங்கே உள்ளார்கள். மக்களிற்கு கொடுத்த வாக்குறுதிப்படி பலவிடயங்களை செய்யமுடியாத இயலாத்தன்மை இந்த அரசிலே காணப்படுகின்றது. அத்துடன் நாடாளுமன்றத்தில் மொட்டுச்சின்னத்தின் பிரதிநிதிகளாக பலர் தெரிவுசெய்யபட்டிருந்தாலும். எங்கள் கட்சி உறுப்பினர்களை கவனம் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கும் விடயமாக இருக்கிறது. இவை தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.

இந்த அரசு தமிழர்களிற்கு எதிரான போக்கினை மாத்திரமின்றி இலங்கை பிரயைகளுக்கு எதிரான போக்குகளையும் முன்னெடுக்கிறதோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது. தமிழ் மக்களின் காணிகளிற்குள் அல்லது அவர்களின் வளங்களிற்குள்ளே தொல்பொருள் ஆக்கிரமிப்பு, மற்றும் புத்தர் சிலைகளை நிறுவும் செயற்பாடுகள் நல்லாட்சி அரசின் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது. இந்த அரசிலும் அது தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. அதனை நாம் கவலையுடன் பார்க்கிறோம். இது எந்த அரசு என்பதைவிட சிங்கள இனவாதிகளின் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலிற்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையாகவே காணப்படுகின்றது என்பது தான் என்னுடைய கருத்து.

கடந்த தேர்தலில் எமது கட்சி கோட்டபாயவின் வெற்றிக்காக உழைத்தி்ருந்தது. அந்த நேரத்தில் நாம் வழங்கிய உழைப்பிற்கான பிரதிபலன் எமக்கு கிடைக்கவில்லை. கோட்டபாய தன்னுடைய அரசியல் கடமையில் இருந்து தவறுகிறாரா என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது. ஆனால் நாம் எமது முயற்சிகளை கைவிடவில்லை.

முப்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றமையால் பிரதமர் மகிந்த எமது கட்சித்தலைவர் கருணாவிற்கு ஒரு பதவியை வழங்கியுள்ளார். அந்த பதவிக்குள் கட்டுப்பட்டவராக அவர் அரசியலை முன்னெடுக்க முடியாது அரசின் கொள்கை திட்டங்களை முன்னெடுப்பவராக அங்கே கடமையாற்றி கொண்டிருக்கிறார்.

ஆனால் எமது கட்சி பிரதமருடன் எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை. தமிழர்களுடைய தீர்வுத்திட்டத்திற்கான ஒற்றுமையை உருவாக்குவதென்ற அடிப்படையில் எமது கட்சியின் கொள்கை உள்ளது என்றார்.