இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டால் மனித பேரவை பிளவுப்படும் – சரத் வீரசேகர

sarath Weerasekara 300x200 1
sarath Weerasekara 300x200 1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா,கனடா,ஜேர்மனி,மொன்டர்கிரினோ மற்றும் மெஸடோனியா ஆகிய 5 நாடுகள் புதிய பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக அறியமுடிகிறது. இவ்வாறான நிலை இடம்பெற்றால் மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுப்படும். இதனை பெரும்பாலான நாடுகள் விரும்பவில்லை ஆகவே இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையிடுவதை மேற்குலக நாடுகளும்,மனித உரிமை பேரவையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தருஸ்மன் அறிக்கையினை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.தருஸ்மன் அறிக்கை பொய்யான காரணிகளை உள்ளடக்கியுள்ளது. என்பதை சர்வதேச யுத்த விசேட நிபுணர்கள் ஆதாரபூர்வமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கும்.

ஜெனிவா விவகாரத்தில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை இணையனுசரனை வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டதால் அக்காலத்தில் இலங்கைக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் ஏதும் செயற்படவில்லை.

நாட்டுக்கு எதிரான பிரேரணைகளில் இருந்து அரசாங்கம் விலகும் என்ற வாக்குறுதியை நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்தோம். இதற்கமைய கடந்த வருடம் இடம் பெற்ற மனித உரிமை பேரவையில் 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகிக் கொண்டது. இதன் பின்னரே மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக அதிக அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்தது.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் பூகோள மட்டத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு நாட்டை சர்வதேச அரங்கில் நெருக்கடிக்குள்ளாக்குவது பொருத்தமற்ற செயற்படாகும். இம்முறை இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் பெரும்பாலான பலம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும். பிரித்தானியா,கனடா,ஜேர்மனி,மொன்டர்கிரினோ,மெசடோனியா ஆகிய 5 நாடுகளும் ஒன்றினைந்து இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நாடுகள் இலங்கைக்கு எதிராக பிரேரணையினை கொண்டு வந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுப்படும். இதனை பெரும்பாலான நாடுகள் விரும்பவில்லை. ஆகவே இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதை சர்வதேச நாடுகள் தவிர்த்துக் கொளள் வேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நாடு என்ற ரீதியில் அனைத்து தரப்பினருடனும் இணக்கமாகவே செயற்படுவோம் என்றார்.