மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்; தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

IMG f9af304d655f74f5332868676714d2aa V
IMG f9af304d655f74f5332868676714d2aa V

வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நிர்மாணப்பணியை தடுத்து நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிவருகின்றனர் . 

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

உக்கிளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் அனுமதியின்றியும் நகரசபையின் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் தனியார் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது .

சுமார் நூறு அடி உயரமாக அமைக்கப்படவுள்ள இக்கோபுரத்தைச் சூழவுள்ள பகுதியில் வசித்து வரும் 30 தொடக்கம் 35 வரையான குடும்பங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது . 

இவ்விடயம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம் , நகரசபை , பிரதேச செயலாளர் , சுற்றுச்சூழல் பாதுகாப்புச் நகரசபை உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டும் இதன் நிர்மாணப்பணிகளைத் தடுப்பதற்குரிய எவ்விதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை . இன்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

இப்பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட அரச ஊழியர்கள் எனப்பலதரப்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மக்கள் குடியிருப்புப்பகுதியில் இவ்வாறு அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்புக் கோபுரத்தினால் பல்வேறு அபாயமான அச்சுறுத்தல்கள் எமக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி மக்கள் குடியிருப்பு அற்ற பகுதிகளில் இக்கோபுரத்தின் பணிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளனர் .

இவ்விடயம் குறித்து வவுனியா நகரசபைத்தலைவர் இ.கௌதமனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் நகரசபையினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் இதன் பணிகளை மேற்கொள்வதற்கு தடை அறிவறுத்தல் நகரசபையினால் வழங்கப்பட்டுள்ளது . பணிமேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.