மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான ‘கொரோனா’ பாதுகாப்பு பொருட்கள் கையளிப்பு

DSC 0058
DSC 0058

மன்னார் வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட அதிகம் தேவை உடைய பாடசாலைகளுக்கான ‘கொரோனா’ பாதுகாப்பு பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) காலை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான முகக் கவசம் , கிருமி தொற்று நீக்கிகள் அடங்கிய பொதிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் (மெசிடோ) அதன் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு மன்னார் வலயக்கல்வி பணிமனையின் தெரிவின் அடிப்படையில் மன்-உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை,மன்- சிவராஜா இந்து மாகா வித்தியாலயம் மற்றும் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் படசாலைகளுக்கு மேற்படி சுகாதார பொருட்கள் முதற்கட்டமாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் , மன்னார் பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி.வாசுகி சுதாகரன் , மெசிடோ நிறுவன ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளை சேர்ந்த 1300 மாணவர்கள் பயன் பெறக் கூடிய வகையில் மேற்படி சுகாதார பொருட்கள் கையளிக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடதக்கது.