கொட்டுல்ல பிரதேசத்தில்58 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகள் கொள்ளை!

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

பியகமகாவற்துறை பிரிவில் கொட்டுல்ல பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரெனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவொன்று வீடொன்றில் நுழைந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவற்துறை மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த செவ்வாய்க்கிழமை விசேட அதிரடிப்படையினர் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு குழுவினர் வீட்டின் சொத்துக்கள் தொடர்பில் சோதனை செய்வதற்காகவே தாம் வந்துள்ளனர் எனக் கூறியுள்ளனர்.

சிவில் ஆடையில் குறித்த வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர்கள், 58 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பில் பியமககாவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவனையாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பியகம காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசேட அதிரடிப்படையினர், குற்ற விசாரணை அல்லது வேறு விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வீடுகளில் நுழைந்து கொள்ளையடிக்கும் குற்றச் செயல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இலங்கைகாவற்துறையில் சிவில் ஆடையில் சேவையில் ஈடுபடும் சில பிரிவுகள் உள்ளன. எவ்வாறிருப்பினும் இவ்வாறு சேவையில் ஈடுபடும்போது அவர்களது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை எடுத்துச் செல்வர்.

எனவே, அடையாள அட்டைகளைப் பெற்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கான உரிமை பொது மக்களுக்கு உண்டு.

எனவே எந்தப் பிரிவினர் எனக் கூறினாலும் அவர்களது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் பெற்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மக்களை ஏமாற்றுபவர்கள் தொடர்பில் இலங்கை காவற்துறை தொடர்ந்தும் அவதானித்து வருகிறது. எனினும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.