சத்தியாக்கிரகப்போராட்டம் 19ஆவது நாளை எட்டியது; அரசியல்வாதிகள் அசமந்தமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிப்பு!

IMG 77ef65117749d8412b9811450946a373 V
IMG 77ef65117749d8412b9811450946a373 V

வவுனியா, பூந்தோட்டம் ஸ்ரீறிநகர் கிராம மக்களினால் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் 19 நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

20 வருடங்களாகியும் தமக்கு காணி, உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்துதரப்படவில்லை, மைதானம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பலவருடங்கள் ஆகியும் எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் இது தொடர்பாக ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்ட வன்னி அபிவிருத்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியும் இந்த விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது போராட்டத்தை முன்னெடுத்து 19 நாட்கள் கடக்கின்ற நிலையில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் ஒரு சிலர் கூட தங்களது பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறியவில்லை என்றும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் வவுனியா தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராசிங்கம் ஆகியோர் மாத்திரமே வருகை தந்து தமது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட நிலையில் தேர்தல் காலங்களில் வருகை தரும் வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களை திரும்பி கூட பார்க்கவில்லை என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.