மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

rain
rain

இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மொனராகலை பொலன்னறுவை, பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 200 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.